கனிமொழிக்கு 6-ந் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது குறித்து அமைச்சர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் முதல்- அமைச்சர் கருணாநிதி தீவிர ஆலோசனை நடத்தினார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் அதிபர்கள், அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் 2-வது குற்றப்பத்திரிகை ஏப்ரல் 25-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான கனிமொழி எம்.பி., சரத்குமார் உள்பட 5 பேர்களின் பெயர்கள் இடம்பெற்றது.
2-வது குற்றப்பத்திரிகையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்களில் 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கனிமொழி எம்.பி., சரத்குமார் மற்றும் சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரிம்முரானி ஆகியோர் மே 6-ந் தேதி டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இதுபற்றி ஆலோசிக்க 27-ந் தேதி தி.மு.க.வின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் கருணாநிதி தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில், உண்மையை நிலைநாட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், முதல்-அமைச்சரின் சி.ஐ.டி. காலனி வீட்டில் நேற்று தீவிர ஆலோசனை நடந்தது.
காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த ஆலோசனை மதியம் 1.20 மணி வரை நடந்தது. இந்த ஆலோசனையில் முதல்-அமைச்சர் கருணாநிதி, துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்ட நிபுணர்கள் பி.எஸ்.ராமன், சண்முகசுந்தரம், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வீட்டில் இருந்த கனிமொழியும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டார். 6-ந் தேதி கோர்ட்டில் ஆஜராவது தொடர்பாக சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த தகவல் பரவியதும் சி.ஐ.டி. காலனி வீடு அருகே பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் குவிந்தனர்.
ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியில் வந்த கி.வீரமணியிடம் இதுபற்றி கேட்டபோது, ``இது வழக்கமான சந்திப்பு தான், வேறு ஒன்றுமில்லை'' என்றார். ஆனால் வேறு யாரும் பத்திரிகையாளர்களுடன் பேசவில்லை.
No comments:
Post a Comment