துவார் ஜி.சந்திரசேகர் தயாரித்துள்ள `கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை அடையாறில் உள்ள ஆந்திர மகிழ சபாவில் நடந்தது.
பாடல்களை, சென்னை நகர திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் வெளியிட, ஆந்திர மகிழ சபாவின் நிறுவனர் கிருஷ்ணமாச்சாரி நரசிம்மன் பெற்றுக்கொண்டார். அப்போது அவரிடம், ஆந்திர மகிழ சபாவில் வசிக்கும் மாற்று திறனாளிகளின் நலனுக்காக, பட அதிபர் துவார் ஜி.சந்திரசேகர் ரூ.1 லட்சம் வழங்கினார்.
விழாவில், கற்க கசடற, கொக்கி, தூத்துக்குடி ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளரும், `ஞாபகங்கள்,' `மயில்' ஆகிய படங்களின் டைரக்டருமான ஜீவன் பேசும்போது, சில உருக்கமான தகவல்களை வெளியிட்டார்.
அவர், ‘’பெரிய பட அதிபர், சின்ன பட அதிபர் என்பது ஒரு படத்தை எடுத்து உரிய நேரத்தில் ரிலீஸ் செய்வதை பொருத்தே அமையும். இந்த படத்தை தயாரித்த துவார் ஜி.சந்திரசேகர் மிக குறுகிய காலத்தில் படத்தை தயாரித்து முடித்து வெளியிட இருக்கிறார். அந்தவகையில், அவர் பெரிய தயாரிப்பாளர்தான்.
நடிகர் பிரகாஷ்ராஜ் பெரிய தயாரிப்பாளர்தான். ஆனால், அவர் தயாரிப்பில் நான் இயக்கியுள்ள `மயில்' படம் மூன்றரை வருடங்களாக `ரிலீஸ்' ஆகாமல், பெட்டிக்குள் முடங்கி கிடக்கிறது. அந்த படத்தை நான் மிக குறைந்த பட்ஜெட்டில், மிக குறுகிய காலத்தில் எடுத்துக்கொடுத்தேன்.
`மயில்' படத்துடன் பூஜை போடப்பட்ட வெள்ளித்திரை, அபியும் நானும், இனிது இனிது, பயணம் ஆகிய படங்கள் திரைக்கு வந்துவிட்டன. தரமான கதையம்சம் கொண்ட `மயில்' படம் முடிவடைந்து மூன்றரை வருடங்கள் ஆகிவிட்டன. படத்தை ரிலீஸ் செய்வதற்காக தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
`மயில்' படம் வெளிவந்தால்தான் எனக்கு வாழ்க்கை கிடைக்கும். அந்த படத்தை ரிலீஸ் செய்யாததால், நான் வேறு பட வேலைகளுக்கு போக முடியவில்லை. தினம் தினம் ரத்தக்கண்ணீர் வடிக்கிறேன். ஒவ்வொரு நாளும் கடப்பது ரணமாக இருக்கிறது.
சினிமா படங்களில் வில்லனாக வரும் பிரகாஷ்ராஜ், நிஜ வாழ்க்கையில் எனக்கு வில்லனாகி விட்டார்’’ என்று பேசினார்.
அடுத்து பேசவந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், டைரக்டர் ஜீவனுக்கு ஆறுதல் கூறும் வகையில் பேசினார்.
``ஜீவன் கவலைப்பட தேவையில்லை. அவருடைய பிரச்சினை பேசி தீர்க்கப்படும்'' என்று கூறினார்.
No comments:
Post a Comment