தமிழ், கன்னடம், இந்தி திரைப்பட நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி பெங்களூரில் வருகிற ஜுன் மாதம் 4ந் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அம்பரீஷ்,
மறைந்த நடிகர் ராஜ்குமார், நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்ட வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அது இன்னும் நிறைவேறவில்லை. இப்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அசோக் கேனி ரூ.3 கோடியும், உள்துறை அமைச்சர் அசோக், மேயர் சாரதாம்மா ஆகியோர் தலா ரூ.1 கோடியும் வழங்கி உள்ளனர். முதல் அமைச்சர் எடியூரப்பாவை சந்தித்தும் நிதி கேட்க உள்ளோம்.
தற்போது நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த போட்டி தொடருக்கு செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்' (சி.சி.எல்.) என்று பெயரிடப்பட்டு உள்ளது.
பெங்களூரில் ஜுன் 4ந் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இந்தி நடிகர் சல்மான் கான் தலைமையிலான மும்பை ஹீரோஸ் அணியும், கன்னட நடிகர் சுதீப் தலைமையிலான கர்நாடக புல்டோசர்ஸ் அணியும் மோதுகின்றன.
கர்நாடக அணியில் துருவ் (துணை கேப்டன்), சிவராஜ்குமார், திகாந்த், சிரஞ்சீவி சார்ஜா, உபேந்திரா, அவினாஸ், பிரதீப் ஜே.கார்த்திக், கிரண் ராவ், ராகுல் தருண் சந்திரா, தருண் சுதிர், மகேஷ், பாஸ்கர், அபிமன்யூ, சங்கர் கவுடா, தர்மா கீர்த்திராஜ் ஆகியோர் இடம்பெறுகிறார்கள்.
சுதீப் மேற்பார்வையில் அணியினருக்கு பயிற்சி அளித்து வருகிறோம். ஏனென்றால், சமீபத்தில்
அவரது தலைமையில் கர்நாடக அணி ஒரு கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று உள்ளது. தற்போதைய நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் மூலம் கன்னட திரைப்பட துறையில் ஒற்றுமை மேலும் வலுவாகும்.
ஜுன் 4ந் தேதி நடைபெறும் போட்டியில் கர்நாடக புல்டோசர்ஸ் அணியை ஊக்குவிக்க வசதியாக, கன்னட சினிமா துறையினருக்கு கர்நாடக சினிமா வர்த்தக சபை விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இந்த கிரிக்கெட் போட்டியில் தமிழ், இந்தி, கன்னட திரையுலகை சேர்ந்த நடிகர்கள் அணிகள், ஒவ்வொரு அணியுடனும் மோதுகின்றன. பெங்களூர், சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் போட்டிகள் நடக்கின்றன. ஐதராபாத்தில் இறுதி போட்டி நடைபெறுகிறது என்றார்.
No comments:
Post a Comment