ர்வதேச அளவில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்திய, அமெரிக்காவை ஆட வைத்து அலைய விட்ட சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பதுங்கியிருந்த அவரை பாகிஸ்தானின் சிஐஏ உதவியுடன் அமெரிக்கப் படையினர் கொன்றுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.
இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி என்றும் ஒபாமா வர்ணித்துள்ளார்.
இதுகுறித்து முப்படைத் தளபதிகள் புடை சூழ வாஷிங்டனில் ஒபாமா செய்தியாளர்களிடம் பேசுகையில், இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு விட்டார். அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பின்லேடன் பதுங்கியுள்ள இடம் குறித்த உறுதியான தகவல் படையினருக்குக் கிடைத்ததும் என்னிடம் தெரிவித்தனர். நான் உடனடியாக தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொல்லுமாறு உத்தரவிட்டேன். அதன்படி நடந்துள்ளது.
இத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. தொடர்ந்து அதில் ஈடுபடுவோம் என்றார்.
டிஎன்ஏ பரிசோதனையின்படி ஒசாமா இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பின்லேடன் உடல் அமெரிக்கப் படைகளிடம்
கொல்லப்பட்ட பின் லேடனின் உடல் அமெரிக்கப் படைகளிடம் பத்திரமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் இஸ்லாமாபாத்தில் நடந்த தாக்குதலில் பின்லேடன் பதுங்கியிருந்த கட்டடத்தை அமெரிக்கப் படையினர் முற்றுகையிட்டு நேரடித் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், ஏவுகணைத் தாக்குதல் ஏதும் நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதன் மூலம் பாகிஸ்தானுக்குள் பதுங்கியிருந்த லேடனை, அமெரிக்கப் படையினர் உள்ளேயே புகுந்து தரை மார்க்கமாக சந்தித்து தாக்கி அழித்துள்ளனர்.
பின்லேடனின் உடல் புகைப்படம் வழியாக உலகுக்குக் காட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
லேடனைக் கொன்றவர்கள் சிஐஏ ஏஜென்டுகள்
பின்லேடனைக் கொன்றவர்கள் சிஐஏ ஏஜென்டுகள் என்றும் கூறப்படுகிறது. பின்லேடனின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து அவரை கொன்றுள்ளனர்.
பாகிஸ்தான் மக்கள் அதிர்ச்சி:
உலகையே குலுங்க வைத்த பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானுக்குள் பதுங்கியிருப்பதாக பலமுறை அமெரிக்கா சொல்லி வந்தது. இதை பாகிஸ்தான் அரசுத் தரப்பும், ராணுவத் தரப்பும் தொடர்ந்து மறுத்து வந்தன.
ஆனால் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலேயே பின்லேடன் பதுங்கியிருந்தது பாகிஸ்தான் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்களுக்குப் பக்கத்திலேயே இத்தனை காலமாக பின்லேன் இருந்தது அவர்களை அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
மேலும் பின்லேடன் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தங்கியிருந்தது நிச்சயம் பாகிஸ்தான் அரசுக்கும், அதன் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது.
மேலும் பின்லேடன் இருப்பிடம் குறித்து பாகிஸ்தான் தரப்பிலிருந்தே யாரேனும் காட்டிக் கொடுத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
பின் லேடன் கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவுத் துறை கொடுத்த தகவலின்படி நடந்த தாக்குதலில் ஒசாமா கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் அமெரிக்காவிடம் இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
ஒசாமா பாகிஸ்தான்-ஆப்கானி்ஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள மலையில் தான் இத்தனை நாட்களாக பதுங்கி இருந்ததாக அதிகாரிகள் நம்பினர்.
நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் ஒசாமாவை வலை வீசித் தேடி வந்தன.
செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் நடந்து பத்து ஆண்டு நிறைவடைய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஒசாமா கொல்லப்பட்டுள்ளார்.
இந்த இரட்டை தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்குடன் போர் புரிந்தது. வரும் காலத்தில் இது போன்று தாக்குதல்கள் நடக்காமல் தடுக்க உளவுத்துறையை சீரமைத்தது.
கடந்த 1998-ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் உள்ள 2 அமெரிக்க தூதரகங்கள் தகர்க்கப்பட்டதில் 231 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு அல் கொய்தா தான் காரணம் என்று கூறப்பட்டது. இது தவிர மேலும் பல தாக்குதல்களுக்கும் அல் கொய்தா மீது குற்றம் சாட்டப்பட்டது.
அணுஆயுத தாக்குதல் நடத்தப்படுமா ?
No comments:
Post a Comment