கன்னட திரை உலகின் முன்னணி கதாநாயக நடிகர் சிவராஜ்குமார். மறைந்த பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகனான இவர், நடிக்க வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
வெள்ளி விழா நாயகனான சிவராஜ்குமார், பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியில் உள்ள காந்திநகரில் நேற்று நடந்த மே தின விழாவில் தனது மனைவி கீதாவுடன் கலந்து கொண்டார். கன்னட சினிமா கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் பேரவை ஏற்பாடு செய்து இருந்த இந்த விழாவில் அவருக்கு பாராட்டு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
விழாவில் கலந்து கொள்ள வந்த சிவராஜ்குமார்-கீதா தம்பதிகளை ஒரு அலங்கார சாரட்டு வண்டியில் வைத்து ரசிகர்கள் அழைத்துச் சென்றனர். சாரட்டு வண்டி சென்ற பாதையின் இரு பக்கங்களிலும் அலங்கார தூண்கள், வரவேற்பு பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன.
சிவராஜ்குமார் வந்தவுடன் ரசிகர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். சிவராஜ்குமார்-கீதா மீது மலர்களை அள்ளி தூவினார்கள். வாழ்த்து முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
அப்போது, பிளைவுட் மரத்தால் செய்யப்பட்டு இருந்த அலங்கார தூண் ஒன்று எதிர்பாராதவிதமாக சரிந்தது. அந்த தூண் அப்படியே சிவராஜ்குமாரின் தலைமீது விழுந்தது.
இதனால் சிவராஜ்குமார் நிலைகுலைந்தார். அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த இடத்தை கையால் தேய்த்து விட்டுக் கொண்டு இருந்தார். அவருக்கு மனைவி கீதாவும் உதவி செய்தார்.
இந்த விபத்தில் சிவராஜ்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து சிவராஜ்குமார் மீண்டு சகஜநிலைக்கு திரும்ப சில நிமிட நேரம் ஆனது. நேற்று பகல் 12.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment