தமிழ்த் திரைப்பட ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்துக்கு கடந்த மாதம் 29-ந்தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் மயிலாப்பூரில் உள்ள செயிண்ட் இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து அன்றே வீடு திரும்பினார்.
ரஜினிகாந்துக்கு சுவாசப் பாதை நோய் தொற்று மற்றும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக இசபெல் மருத்துவமனை டாக்டர்கள் விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில் 4 நாட்கள் கழித்து கடந்த 4-ந்தேதி ரஜினிகாந்த் மீண்டும் இசபெல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார். “ராணா” படத்தில் மாறுபட்ட வேடங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள ரஜினி, அதில் குறிப்பிட்ட ஒரு வேடத்துக்காக உடல் எடையை கணிசமான அளவுக்கு குறைத்ததாக தெரிகிறது.
மேலும் தண்ணீர் குடிக்கும் அளவும் குறைந்து போனதாம். இத்தகைய காரணங்களால் ரஜினிக்கு அதிகப்படியான சோர்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. ரஜினிக்கு உண்மையில் என்ன உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்ற தகவலை, அவரது குடும்பத்தினர் தெரிவிக்காததால் மாறுபட்ட பல வதந்திகள் வெளியானது. இதனால் ரஜினி ரசிகர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (மே 13-ந் தேதி) ரஜினி உடல் நிலை குறித்து தமிழகம் முழுவதும் திடீர் பரப்பு ஏற்பட்டது. அன்று அவர் போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரது ரசிகர்களிடம் பரபரப்பு அதிகரித்தது.
அ.தி.மு.க. புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கு வந்த குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் போரூர் மருத்துவமனைக்கு சென்று ரஜினியை பார்த்து விட்டு வந்து அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக நிருபர்களிடம் கூறினார்கள். இதனால் ரஜினி ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.
ரஜினிக்கு கடந்த 14, 15-ந் தேதிகளில் அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. 61 வயதாகும் அவருக்கு நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது நெஞ்சில் அதிகப்படியான நீர்க்கோர்ப்பு ஏற்பட்டிருந்தது. அந்த நீர்க்கோர்ப்பு திரண்டு நுரையீரலை நெருக்கியதால் திடீர், திடீரென ரஜினி மூச்சுவிட சிரமப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த திங்கட்கிழமை ரஜினியின் நெஞ்சில் இருந்த நீர் கோர்ப்பு அகற்றப்பட்டது. நீர்கோர்ப்பு பிரிக்கப்பட்டாலும் ரஜினியின் சுவாசப்பாதை நோய்த் தொற்று குறையவில்லை. இதனால் டாக்டர்கள் அவருக்கு செயற்கை சுவாசம் அளித்தனர். ஆன்டிபயாடிக் மருந்துகளும் கொடுக்கப்பட்டன.
இந்த நிலையில் ரஜினியின் சுவாச உறுப்புகள் தொடர்ந்து சரிவர இயங்காத காரணத்தால் அவரது சிறுநீரகங்கள் மற்றும் இதய உறுப்புகளின் செயல்பாடுகளில் சற்று மந்தம் ஏற்பட்டது. உடனடியாக ரஜினிக்கு ரத்தப் பரிசோதனை, சிறுநீரகங்கள், நுரையீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை மதிப்பீடு செய்ய அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இந்த பரிசோதனைகளின் அடிப்படையில் ரஜினிக்கு நுரையீரல், சிறுநீரகங்கள், இதயம் உள்ளிட்ட சில உறுப்புகளுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை கொடுப்பது மிகவும் அவசியம் என்று டாக்டர்கள் தீர்மானித்தனர்.
இதையடுத்து ரஜினிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அவர்கள் ரஜினிக்கு தீவிர சிகிச்சையைத் தொடங்கினார்கள். இதற்காக ரஜினி ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். முதல் கட்டமாக ரஜினி எந்தவித திணறலும் இல்லாமல் மூச்சு விடுவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை காரணமாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக நேற்றிரவு டாக்டர்கள் தகவல் வெளியிட்டனர்.
என்றாலும் நுரையீரல் செயல்பாடு சீராகாததால் நேற்று இரவு ரஜினியின் சிறுநீரகங்கள் ஒத்துழைக்கவில்லை. இதனால் ரஜினிக்கு செயற்கை முறையில் ரத்தத்தை சுத்திகரிக்கச் செய்யும் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று நள்ளிரவு ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-
ரஜினியின் சிறுநீரகங்கள் சீராக இயங்கவில்லை. எனவே டயாலிசிஸ் சிகிச்சையை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. டயாலிசிஸ் சிகிச்சையை ஒத்தி வைக்கவும் முடியாது. சிறுநீரகங்கள் சரிவர இயங்காத காரணத்தால் ரஜினியின் உடம்பில் ரத்த ஓட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டியதிருந்தது.
மேலும் அவரது உடம்பில் சோடியம், புரோட்டீன் அளவு குறைந்து போனது. எனவே ரஜினிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம்.
இவ்வாறு டாக்டர்கள் கூறினார்கள்.
ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை தொடர்ந்து கொடுக்க வேண்டிய திருக்குமா என்று கேட்கப்பட்டது. அதற்கு டாக்டர்கள் கூறுகையில், அதுபற்றி இப்போது சொல்ல இயலாது. சுவாசப்பாதை நோய்த் தொற்று குணம் அடைந்து விட்டால் ரஜினியின் சிறுநீரகங்கள் நல்ல நிலைக்கு திரும்பி விடும் என்று நம்புகிறோம் என்றார்கள்.
இன்று (வியாழன்) காலை நிலவரப்படி ரஜினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் கூறினார்கள்.
ரஜினி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள தகவல் வெளியானது. போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு விட்டனர். சில ரசிகர்கள் கதறி அழுதனர். ரஜினியை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து போரூர் மருத்துவமனை முன்பு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் 7-வது மாடிக்கு பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமச்சந்திரா மருத்துவ மனையில் உள்ள இதர பிரிவு டாக்டர்கள், ஊழியர்கள் கூட 7-வது மாடிக்கு செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ரஜினி விரைவில் நலம் பெற வேண்டி தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் சிறப்பு வழிபாடுகளில் ஈடுட்டுள்ளனர்.

No comments:
Post a Comment