அமெரிக்கா அதிரடியாக உள்ளே புகுந்து, பாகிஸ்தான் ராணுவ அகாடமிக்கு அருகே வசித்து வந்த ஒசாமா பின்லேடனை சுட்டு வீழ்த்தி விட்டு உடலையும் தூக்கிக் கொண்டு போய் கடலில் வீசி விட்டுச் சென்றதால் ஏற்பட்டுள்ள பெருத்த அவமானத்திலிருந்து தப்பிக்க, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தலாம் அல்லது தனது ஆதரவு தீவிரவாத அமைப்புகளைத் தூண்டி விட்டு இந்தியாவில் பெரும் நாச வேலைகளில் ஈடுபடலாம் என இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கருதுகிறார்கள்.
பாகிஸ்தான் எத்தகைய சதி வேலைகளில் ஈடுபட்டாலும் அதை முறியடிக்கும் வகையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உளவுப் பிரிவினரும் தீவிரகமாக கண்காணித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு அருகே, ராணுவ அகாடமிக்கு சில அடிகள் தொலைவில் ஒரு வீட்டில் படு பத்திரமாக வசித்து வந்துள்ளான் பின்லேடன். ஆனால் இதுகுறித்து தங்களுக்குத் தெரியவே தெரியாது என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. அமெரிக்காவின் அதிரடித் தாக்குதலில் பின்லேடன் கொல்லப்பட்டதும், ராணுவ அகாடமிக்கு அருகிலேயே அவன் வசித்து வந்ததும் பாகிஸ்தானுக்கு பெரும் தலைக்குனிவையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அரசு மீதும், ஐஎஸ்ஐ மீதும் அந்த நாட்டு மக்களே தற்போது காரித் துப்பும் அளவுக்கு நிலைமை போய் விட்டது. மேலும் உலக அளவிலும் பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி வலுத்து வருகிறது.
இதையடுத்து உள்ளூரில் தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும், அமெரிக்காவின் செயலால் ஏற்பட்டுள்ள கடும் கொந்தளிப்பிலிருந்து மக்களை திசை திருப்பும் வகையிலும் இந்தியாவின் மீது தனது கோபத்தை பாகிஸ்தான் காட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஏற்கனவே அத்துமீறி அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடத்துவது வழக்கம். தற்போது இது அதிகரிக்கலாம் அல்லது மேலும் எல்லை மீறி உள்ளே வந்து தாக்குதல் நடத்தவும் எத்தனிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதை விட முக்கியமாக தனது ஆதரவு தீவிரவாத இயக்கங்கள் மூலம், இந்தியாவுக்குள் பெருமளவில் நாச வேலைகளில் பாகிஸ்தான் ஈடுபடலாம் என்றும் தெரிகிறது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ இதுதொடர்பான திட்டங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று இந்திய பாதுகாப்பு நிரபுணர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் தாக்குதல் குறித்து சாதாரணமாக கருத்து தெரிவித்த இந்திய ராணுவத் தளபதி வி.கே.சிங் மற்றும் விமானப்படைத் தளபதி மாலிக் ஆகியோரின் கருத்துக்களை மிகவும் சீரியஸாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி கயானி கருதி பேசியிருப்பது இதை உறுதிப்படுத்துவதாக தெரிகிறது.
இந்தியா தங்கள் மீது படையெடுக்கப் போவதாக கூறி, இந்திய எல்லையில் பெருமளவில் படைகளைக் குவிக்கலாம் பாகிஸ்தான் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் இந்தியாவை ஏதாவது ஒரு வகையில் வம்புக்கிழுத்து தேவையில்லாமல் பதட்டத்தை ஏற்படுத்தி, பேச்சுவார்த்தை, அது இது என்று கூறி தனது மக்களையும், உலக மக்களின் கவனத்தையும் திசை திருப்ப பாகிஸ்தான் முயற்சிக்கலாம் என்று இந்திய பாதுகாப்புத்துறை வட்டாரம் சந்தேகிக்கிறது.
இதேபோல பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்திற்கும் ஒருபோதும் ஒத்துவராது என்பது உலகம் அறிந்தது. மேலும் ஐஎஸ்ஐயும், ராணுவமும் சேர்ந்துதான் இத்தனை காலமாக தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இருந்து வருகின்றன. அது தற்போது வெட்ட வெளிச்சமாகி விட்டதால் இரு தரப்புமே கடும் நெருக்கடியில் உள்ளன.
எனவே விரைவில் இவர்களுக்கும், அரசுத் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே இருப்பதாக கருதப்படுகிறது.


No comments:
Post a Comment