மரணம் அடைந்த சத்ய சாய்பாபாவின் உடல், புட்டபர்த்தியில் அவர் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து, அருளுரை வழங்கிய பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் ஹாலில் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது சமாதி மீது தங்கத்தாலான அவரது முழு உருவ சிலையை நிறுவி, கோவில் கட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் முடிவு செய்து இருந்தனர். ஆனால், தங்க சிலை நிறுவினால், அதை பாதுகாக்க மிகப்பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்ய வேண்டியது இருக்கும்.
அப்படி ஏற்பாடு செய்யப்படும்போது பாதுகாவலர்களால் பக்தர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படும். இதனால் பக்தர்கள் எளிதாக, வசதியாக, நிம்மதியாக தரிசனம் செய்ய முடியாது என்ற கருத்து பரவலாக எழுந்தது. இந்த காரணங்களால் சாய்பாபாவுக்கு தங்க சிலை நிறுவும் திட்டம் கைவிடப்பட்டது.
ஆகவே, தங்க சிலைக்கு பதிலாக, ஷீரடியில் சாய்பாபாவுக்கு பளிங்கு சிலை அமைத்து இருப்பதுபோல், சத்ய சாய்பாபாவுக்கும் பளிங்கு சிலையே அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த சிலையை பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தனது செலவில் அமைத்துத்தர முன்வந்துள்ளார். அவரது கோரிக்கையை சத்ய சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
சத்ய சய்பாபாவின் தாயாரின் நினைவு நாள் வருகிற 6-ந் தேதி வருகிறது. அன்றைய நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும், சத்ய சாய்பாபாவுக்கு ஒரு வார காலம் மகா ஆராதனை நடக்கிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள். இந்த ஆராதனை முடிவடைந்ததும் 13-ந் தேதி அல்லது 15-ந் தேதி சத்ய சாய்பாபாவின் முழு உருவ பளிங்கு சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என்று தெரிகிறது.
சத்ய சாய்பாபா மத்திய அறக்கட்டளையின் புதிய தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதியும், தமிழகத்தை சேர்ந்தவருமான பகவதி தேர்ந்து எடுக்கப்படுவார் என்று தெரிகிறது. ஏற்கனவே, நீதிபதி பகவதி அல்லது மும்பையை சேர்ந்த பிரபல ஆடிட்டர் இந்துலால் ஷா ஆகிய இருவரில் ஒருவரை தலைவராக நியமிக்க சாய்பாபா உயிருடன் இருந்தபோதே முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், இருவரும் தங்களுக்கு வயதாகி விட்டதாகவும், உடல் நிலையும் ஒத்துழைக்க வில்லை என்றும் கூறி தலைவர் பொறுப்புக்கு வர விரும்பவில்லை என்றும், அறக்கட்டளை உறுப்பினர்களாக நீடிக்க விரும்பவில்லை என்றும் சாய்பாபாவிடம் தெரிவித்ததாகவும், அவர்களது விருப்பத்தை சாய்பாபா ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் தங்களது விருப்பத்தின் பேரிலேயே நேற்று முன்தினம் நடந்த அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்தவரும், சாய்பாபா அறக்கட்டளையின் உறுப்பினர்களில் ஒருவருமான ஸ்ரீனிவாசனை புதிய தலைவராக நியமிக்க அறக்கட்டளை நிர்வாகிகள் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. ஆனால், புட்டபர்த்தியில் அவருக்கு பலத்த எதிர்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, வருகிற 7 அல்லது 8-ந் தேதி நடைபெறும் அறங்காவலர்கள் குழுக்கூட்டத்தில், நீதிபதி பகவதியை கொஞ்ச காலம் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்வது என்றும், அவரது வழிகாட்டுதலுக்கு பின்னர் ஸ்ரீனிவாசனை புதிய தலைவராக தேர்ந்து எடுக்கலாம் என்றும் அறங்காவலர்கள் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment