அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் வீட்டை அமெரிக்கப் படையினர் முற்றுகையிட்டு நடத்திய தாக்குதலின்போது உயிர் தப்பிய பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
அமெரிக்கப் படையினர் பாகிஸ்தானின் அபோத்தாபாத்தில் உள்ள பின்லேடன் வசித்து வந்த வீட்டை முற்றுகையிட்டு அவனை சுட்டு வீழ்த்தியபோது, பின்டேனின் மகன்களில் காலித் என்பவர் சம்பவத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த சமயத்தில் அங்கிருந்த பின்லேடனின் இன்னொரு மகனான ஹம்சா என்பவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவர் கொல்லப்படவில்லை, அமெரிக்கப் படையினரிடமும் சிக்கவில்லை. அதேபோல பாகிஸ்தான் படையினரிடமும் அவர் சிக்கவில்லை என்று தெரிகிறது.
ஹம்சாவின் தாயார், பாகிஸ்தான் படையினரிடம் சிக்கியுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் ஹம்சா குறித்து யாரிடமும் தகவல் இல்லை.
அதேசமயம், பின்லேடன் உடலைத் தவிர வேறு யாருடைய உடலையும் தாங்கள் கொண்டு செல்லவில்லை. அதேபோல யாரையும் தாங்கள் பிடித்துச் செல்லவில்லை என்று அமெரிக்கா மறுத்துள்ளது.
ஒசாமா பின்லேடனுக்கு மொத்தம் ஐந்து மனைவிகள் உள்ளனர். அவருடைய பிள்ளைகள் தற்போது 18 பேர் என்று கூறப்படுகிறது. இவர்களில் ஹம்சா எத்தனையாவது குழந்தை என்பது தெரியவில்லை.
ஹம்சா தப்பியிருக்கலாம் அல்லது அவரை பாகிஸ்தான் படையினர் தங்கள் வசம் வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment