கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் அமைக்குமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டு என்றும் இல்லாத அளவிற்கு ஆரம்பத்தில் இருந்தே வெயிலின் கொடுமை தாங்க முடியவில்லை. ஏற்கெனவே நொந்து போய் உள்ள மக்களுக்கு மின்வாரியம் அமல்படுத்தும் மின்வெட்டு தாங்க முடியாத துயரத்தை தந்து வருகிறது.
இச்சூழ்நிலையில், கோடை காலத்தின் கொடுமையை தவிர்க்க நம்மால் இயன்ற நற்பணிகளை ஆண்டுதோறும் நாம் செய்து வருகிறோம். மக்களுக்கு உதவிட தண்ணீர் பந்தல்கள் அமைத்து
நல்ல குடிதண்ணீர், நீர்மோர், பானகம், போன்ற தாகம் தணிக்கும் வசதிகளை செய்வது வாடிக்கையாகும்.
இந்த ஆண்டும் தேமுதிக தொண்டர்களும் ஆதரவாளர்களும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து முறையாக அவை செயல்பட வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
மக்கள் பணியே மகேசன் பணி என்ற உணர்வோடு தேமுதிக தொண்டர்கள் இந்த வேண்டுகோளை முக்கியப் பணியாகக் கருதி உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment