தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன. இதையொட்டி தலைமை தேர்தல் கமிஷனர் குரேசி, தேர்தல் கமிஷனர்கள் சம்பத், ஹரிசங்கர் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது கூறியதாவது:-
இதுவரை நடந்த தேர்தல்களில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் சிறப்பானது. தமிழ்நாடு, மேற்கு வங்காளத்தில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் ஓட்டுப்பதிவு சுமூகமாக நடந்துள்ளது. தேர்தலுக்கு முன்பு தமிழ் நாட்டில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
60 கோடியே 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 91 மையங்களில் நடைபெற இருக்கும் ஓட்டு எண்ணிக்கைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்காக மாற்றப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இருக்காது.புகார் அடிப்படையில் மாற்றப்பட்டவர்கள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மதுரை மேற்கு தொகுதியில் ஓட்டுப்பதிவின்போது முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இதுபற்றி மாவட்ட கலெக்டர் தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பினார். இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு தேர்தல் கமிஷனர் சம்பத் அளித்த பதில் வருமாறு:-
மதுரை மேற்கு தொகுதி தேர்தல் குறித்து மாநில தேர்தல் கமிஷனர் விளக்கம் கேட்டார். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் விளக்கம் அளித்தார். அதன் அடிப்படையில் இந்த பிரச்சினை முடித்துக் கொள்ளப்பட்டு விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment