இலங்கையில் நடந்த போரில் ஈழத் தமிழினம் இனப் படுகொலை செய்யப்பட்டதை வெளிக்கொணர ஐ.நா.பன்னாட்டுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி சென்னையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும் கோரி, நாடு கடந்த தமிழீழ தேச அரசின் தோழமை மையம் ஒருங்கிணைத்த இந்த பேரணிக்கு பேராசிரியர் சரசுவதி தலைமை தாங்கினார்.
மாலை 4.30 மணிக்கு சென்னை கடற்கரையில் உள்ள கண்ணகி சிலையில் இருந்து தொடங்கியது. பேரணியைத் தொடங்கி வைத்து பிரபல மீனவர் தலைவர் ஜீவரத்தினத்தின் மகள் பானுமதி பாஸ்கர் உரையாற்றினார்.
பேரணியில் நாம் தமிழர் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, மே 17 இயக்கம், பெரியார் திராவிடர் கழகம், தமிழ் தேச பொதுவுடமைக் கட்சி, தமிழ் தேச விடுதலை இயக்கம், பாரம்பரிய மீனவர் சங்கம், மேலும் பல மீனவர் அமைப்புகள், மாணவர்கள், மகளிர் அமைப்புகள் என பெரும் திரளாய் தமிழர்கள் திரண்டனர்.
ஐ.நா.விசாரணைக்கு டெல்லி அரசே உதவிடு, சர்வதேச நீதிமன்றத்தில் இனப் படுகொலையாளன் ராஜபக்சவை நிறுத்திடு, வேண்டும் வேண்டும் விசாரணை, வேண்டும் வேண்டும் இனப் படுகொலைக்கு தண்டனை, மீனவர் படுகொலையை தடுத்து நிறுத்து, தமிழக மீனவர்களுக்கு தற்காப்பிற்காக ஆயுதம் கொடு, விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்றிடு, ஈழத் தமிழர் வாழ்வுரிமையை அங்கீகரித்திடு எனபது போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
உழைப்பாளர் சிலை அருகே பேரணி முடிவு பெற்றது. அங்கு, சமீபத்தில் சிங்கள கடற்படையினர் தாக்குதலில் கொல்லப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரின் உருவப் படங்கள் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment