நடிகர் அஜீத் தனது நற்பணி மன்றத்தை கலைத்து அறிவித்தார். அஜீத்தின் இந்த அறிவிப்பு ரசிகர்களை மன வருத்தத்திற்கும், அதிர்ச்சிக்கும் ஆளாக்கியுள்ளது.
அஜீத்தின் உத்தரவை தொடர்ந்து கோவை மாவட்ட நற்பணி இயக்க அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மன்ற தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் வக்கீல் நாகராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அசோக்குமார், நாகராஜ்,
நடிகர் அஜீத்தின் இந்த அறிவிப்பு கோவை மாட்ட ரசிகர்களின் இதயங்களில் இடி இறங்கியதுபோல் உள்ளது. ரசிகர்கள் ஆழ்ந்த மனவருத்ததில் உள்ளனர். நாங்கள் என்றுமே அஜீத்தின் கட்டளைபடி செயல்படுபவர்கள். அவரது முடிவை மாற்றிக்கொள்ளும்படி நெருக்கடி கொடுக்க மாட்டோம். ஆனாலும் அஜீத்தின் முடிவை கோவை மாவட்ட ரசிகர்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எங்களுக்கு சென்னையில் இருந்து தொலைபேசி மூலம் தகவல் வந்தது. நற்பணி இயக்கத்தை உடனடியாக கலைத்துவிடும்படி தெரிவித்தனர். நற்பணி இயக்கம் கலைக்கப்பட்டாலும் அஜீத் ரசிகர் மன்றத்தில் நாங்கள் செயல்படுவோம். தலைவர் அஜீத் சொல்லும் வழியில் நடப்போம்.
அவரது படம் வெற்றி அடைய இதுவரை கட்அவுட் மற்றும் பேனர் வைத்தோம். இனியும் அதுபோல் பட்அவுட் வைத்து கொண்டாடுவோம். அஜீத்தின் 50வது படமான மங்காத்தாவிற்கும் இந்த கட்அவுட் மற்றும் பேனர்கள் வைப்போம்.
அனைத்து மன்ற உறுப்பினர்களிடமும் தலா ரூ.20 வீதம் வசூலித்து முறையான இயக்கமாக எந்தவித அரசியல் சாயமும் இன்றி அஜீத்தின் வழியில் நடந்து வந்தோம்.
ரசிகர் மன்றத்தினர் அரசியலில் ஈடுபட விரும்பினால் அவரவர்கள் விரும்பும் கட்சியில் சேர்ந்து கொள்ளலாம். நாங்கள் அதிமுகவில் சேர முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் மே 1ஆம் தேதி நடத்த உள்ளோம். இதில் அனைத்து மன்ற நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள். கூட்டத்த்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment