சென்னை அயனாவரத்தில் கவிஞர் கண்ணதாசன் அண்ணனுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்டார்.
கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.சீனிவாசனின் மகன் ஏ.எல்.எஸ்.கண்ணப்பன். சினிமா தயாரிப்பாளரான இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மனைவி ஜெயந்தி (வயது 50), சென்னை கோபாலபுரத்தில் உள்ள ரத்னாசெட்டி தெருவில் வசித்து வருகிறார்.
சென்னையில் ஏ.எல்.எஸ். கண்ணப்பனுக்கு பூர்வீக சொத்து ஏராளமாக உள்ளன. இவருடைய தாத்தா வெள்ளையப்ப செட்டியாருக்கு சொந்தமான நிலம் அயனாவரம், பெரம்பூர் பகுதியை உள்ளடக்கி ஆயிரத்து500 ஏக்கர் இருந்தது.
அந்த இடத்தின் பெரும் பகுதி அரசுக்கு கொடுத்தது போக, அயனாவரம் - கொன்னூர் நெடுஞ்சாலையில் செட்டித் தோட்டம் என்ற இடத்தில் 90 கிரவுண்ட் காலி நிலம் உள்ளது. இந்த இடத்தில், அயனாவரம் போலீஸ் நிலையமும், குடிநீர் வடிகால் வாரிய சுத்திகரிப்பு நிலையமும் செயல்படுகிறது. மேலும், வேன், சரக்கு ஆட்டோக்கள் நிறுத்தும் இடமாகவும் இருந்து வந்துள்ளது.
அந்த இடத்தை சுற்றிலும், முள்செடிகள் வளர்ந்து பெரிய காடாகவும், குப்பை மேடாகவும் காட்சி அளிக்கிறது. கடந்த 4 மாதத்திற்கு முன்பு ஜெயந்தி, தனக்கு சொந்தமான நிலத்தின் வில்லங்க சான்றை பார்த்து அதிர்ச்சியடைந்தார். சான்றிதழில் தனது பெயருக்கு பதிலாக அபிபுல்லா என்பவரது பெயர் இடம் பெற்றிருந்தது.
இது குறித்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் ஜெயந்தியும், அவரது வக்கீல் ஆனந்தனும் புகார் கொடுத்தனர். அந்த புகார் மனுவில், ``போலி ஆவணம் தயாரித்து தன் பெயரில் உள்ள ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்து, அபிபுல்லா என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நில மோசடி குறித்து விசாரணை நடத்த கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர்,
’’நாங்கள் மேற்கொண்ட விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டை சேர்ந்த விக்டர்ராஜ் என்பவர், போலி ஆவணம் தயாரித்து ரூ.100 கோடி மதிப்புள்ள 42 கிரவுண்ட் நிலத்தை புரசைவாக்கத்தில் ஜவுளிக்கடை நடத்தி வரும் அபிபுல்லாவுக்கு கடந்த ஆண்டு ரூ.13 கோடிக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
ஜவுளிக்கடை அதிபருக்கு விற்கப்பட்ட அந்த 42 கிரவுண்ட் இடத்தில் அயனாவரம் போலீஸ் நிலையமும், குடிநீர் வாரிய சுத்திகரிப்பு நிலையமும் அடங்குகிறது.
இந்த மோசடியில் ஈடுபட்ட விக்டர் ராஜுவை கைது செய்துள்ளோம். வெள்ளையப்ப செட்டியாரின் மகன் லட்சுமணன், அவரது மகன் எல்.கண்ணப்பன் தனக்கு அந்த இடத்தை விற்க பவர் எழுதி கொடுத்துள்ளதாக என்று விக்டர்ராஜு தெரிவித்துள்ளார்.
எனவே எல்.கண்ணப்பன் யார்? அவர் உயிருடன் இருக்கிறாரா? என்று விசாரணை நடத்தி வருகிறோம். பல கோடி மதிப்புள்ள சொத்தை குறைந்த விலைக்கு வாங்கிய ஜவுளிக்கடை அதிபர் அபிபுல்லா மீதும் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment