அழியாத கல்வியைக் கொடுக்கும் ஆசிரியையைக் கொடூரமாகக் கொலை செய்த மாணவனை விருந்தினர் போல கவனிக்கிறார்கள். அவனுக்கு தண்டனை ஏதும் வழங்கப்பட்டதாகவே தெரியவில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கினால்தான் எதிர்காலத்தில் இதுபோன்ற கொடூரங்களைத் தடுக்க முடியும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை பிராட்வே ஆர்மீனியன் தெருவில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் ஆண்கள் பள்ளியில் கடந்த 9ம் தேதி இந்தி ஆசிரியை உமா மகேஸ்வரி என்பவரை அவரது வகுப்பில் படித்து வந்த 9ம் வகுப்பு மாணவன் ஒருவன் கத்தியால் குத்திப் படுகொலை செய்தான்.
இந்தக் கொடூரச் செயல் தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டையே பதற வைத்துள்ளது. சரியாக படிக்கவில்லை என்று கண்டித்த ஆசிரியையை கத்தியால் குத்திக் கொலை செய்த செயல் அனைத்துத் தரப்பினர் மனதிலும் நெருப்பை அள்ளிப் போட்டுள்ளது.
குறிப்பாக ஆசிரியர் சமுதாயத்தினரும், பெற்றோரும் மிகப் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். மாணவர்களைக் கண்டிக்கவே கூடாதா என்ற மிகப் பெரும் கேள்வியும் இன்று சமூகத்தின் முன் எழுந்து நிற்கிறது. எப்படித்தான் படிக்காத பிள்ளைகளைத் திருத்துவது என்ற பெரும் குழப்பமும் நம்மிடையே எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி நேற்று திறக்கப்பட்டது. ஆசிரியைக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் பெரும் வருத்தமும், வேதனையும் கலந்த முகத்துடன் காணப்பட்டனர்.
ஆசிரியை உமா மகேஸ்வரியின் கொடூர முடிவு அவர்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறாத வலியுடன் அவர்கள் காணப்பட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட மாணவன் தற்போது சீர்திருத்த முகாமில் நடத்தப்படும் விதமும் அவர்களை பெரும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில்,
அழியாத கல்வியை கொடுக்கும் ஆசிரியையை கொலை செய்தவனுக்கு, தண்டனை எதும் வழங்கப்பட்டதாகவே தெரியவில்லை. அவன் டி.வி. பார்க்கிறான். நன்றாக சாப்பிடுகிறான். அவனை விருந்தினரைப்போல் கவனிக்கிறார்கள்.
திட்டமிட்டு கத்தியை மறைத்து கொண்டு வந்து, ஆசிரியையை நெருங்கிச் சென்று கத்தியை எடுத்து குத்தி கொலை செய்துள்ளான். இதனால் 2 குழந்தைகள் தாயை இழந்து நிற்கிறார்கள். ஆசிரியையாக இருந்தாலும் அவரும் ஒரு தாய். அவனுக்கு கட்டாயமாக கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே, மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க முடியும் என்று பெரும் வேதனையுடன் அவர்கள் கூறினார்கள்.
இதேபோல சம்பந்தப்பட்ட மாணவனுடன் படித்து வரும் சக மாணவர்களும் கூட அந்த மாணவனின் செயலால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். எங்களுடன் படித்த மாணவன் இப்படி ஆசிரியரை கொலை செய்யும் அளவுக்கு துணிந்திருக்கிறான் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. அவனுடன் பழகியதை நினைத்து வெட்கப்படுகிறோம். இவனால் மாணவர்கள் சமுதாயத்துக்கே களங்கம் ஏற்பட்டுவிட்டது. அவனுக்கு சரியான தண்டனை வழங்கி நல்வழிப்படுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய பள்ளித் தாளாளர் தேவராஜன் கூறுகையில், ஆசிரியை உமாமகேஸ்வரி மிகவும் திறமையானவர். ஆங்கிலம், தமிழ், இந்தி என பல மொழிகளில் சிறந்து விளங்கினார். ஆசிரியை உமா மகேஸ்வரியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. கடவுள் கொடுத்தார், கடவுள் எடுத்துக் கொண்டார் என்று பைபிளில் உள்ளது. ஆனால் இப்படியா எடுக்க வேண்டும் என்று ஆசிரியை உமா மகேஸ்வரியின் மரணம் வேதனைப்பட வைக்கிறது என்றார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கிஷோர் பேசுகையில், ஆசிரியைக்கு ஏற்பட்ட இந்த துயரத்துக்கு பெற்றோர்களும் ஒரு காரணமாக இருக்கிறார்கள். பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளிடம் பெற்றோர்கள் குறைந்தது 30 நிமிடமாவது செலவிடவேண்டும். அவர்களது டைரியில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். இதுபோல இல்லாவிட்டால், குழந்தைகள் முரடன்களாக மாறி இதுபோன்ற சம்பவத்துக்கு வழிவகுத்து விடுகிறது என்றார்.
No comments:
Post a Comment