'பேஸ் புக்'கில் ஆட்சேபகரமான புகைப்படங்கள், கருத்துக்கள், சமூக விரோத மற்றும் மத விரோத கருத்துக்கள் இடம் பெறுவதாகவும், இவை சமூக மற்றும் மத மோதல்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதால் அவற்றை தடை செய்யகோரி டெல்லி கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, 22 சமூக வலைத்தள இணைய தளங்களுக்கு, விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியது. பிப்ரவரி 6-ந்தேதி (இன்று) அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டது. அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பேஸ்புக், யாகூ, மைக்ரோ சாப்ட் போன்ற நிறுவனங்கள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தங்களது இணைய தளங்களில் இடம் பெற்றிருந்த ஆட்சேபகரமான கட்டுரைகள், புகைப்படங்கள், துணுக்குகள் போன்றவற்றை நீக்கிவிட்டதாகவும், இதுபோன்ற விஷயங்கள் இனி இடம் பெறாமல் பார்த்துக் கொள்வதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விஷயத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் இருப்பதாவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கூகுள் இணையதளம் முறையான அறிக்கை தாக்கல் செய்யாததற்கு கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. சம்மன் தாமதமாகத்தான் கிடைத்தது. அதனால் அறிக்கை, தாக்கல் செய்ய முடியவில்லை என்று அந்நிறுவனம் கூறியது. இதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.
இந்த பிரச்சினை பல வாரங்களாக பேசப்பட்டு வருகிறது. எனவே எதுவும் தெரியாதது போல் நடந்து கொள்ள வேண்டாம் என்று கோர்ட்டு கண்டித்தது.
No comments:
Post a Comment