2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை விசாரிப்பது பற்றி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்குகிறது.
2ஜி ஊழலில் அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு உண்டு என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ப. சிதம்பரத்தை விசாரிப்பது பற்றி விசாரணை நீதிமன்றமான சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்றது. இந்நிலையில் 2ஜி ஊழல் வழக்கு விசாரணை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஷைனி முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
2ஜி வழக்கில் சிதம்பரத்தை சேர்ப்பது பற்றி நீதிபதி ஷைனி அளிக்கப் போகும் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சிதம்பரம் மீதான குற்றச்சாட்டு என்ன?
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா பல்வேறு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்திருந்தார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான விலை நிர்ணயத்தை தொலைத் தொடர்புத் துறையும் நிதி அமைச்சகமும் இணைந்துதான் முடிவெடுக்க வேண்டும். அப்போது நிதிஅமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம்.
2ஜி அலைக்கற்றை விலை நிர்ணயம் தொடர்பாக ஆ.ராசாவும் ப.சிதம்பரமும் 3 முறை ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு முன்பு பிரதமர் மன்மோகன்சிங்கை ஆ.ராசாவும் ப.சிதம்பரமும் இரண்டு முறை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற ஆ.ராசாவின் நிலைப்பாட்டை ப.சிதம்பரம் தடுத்திருந்தால் ஏலமுறையை கடைபிடித்திருக்கலாம் என்பது குற்றச்சாட்டு.
2ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசாவின் சதிக்கு ப.சிதம்பரம் துணை போனார் என்பது சுப்பிரமணிய சாமியின் புகார்.
ப.சிதம்பரத்தை விசாரிக்கலாம் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்தால் அவர் கட்டாயம் பதவி விலக நேரிடும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment