தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நேற்று காலையில் அமைதியாக தொடங்கியது. அப்போது, கருணாநிதி, அன்பழகன், மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி, கனிமொழி வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கட்சி அமைப்பில் மாற்றங்கள் செய்வது குறித்து இந்த பொதுக்குழுவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை. பொதுவான தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டன.
காங்கிரசுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று சிலர் கருத்து தெரிவித்தனர். இதனை பெரும்பாலோர் வரவேற்றனர். காங்கிரசுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்று ஒரு உறுப்பினர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் சிறு சலசலப்பு ஏற்பட்டது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சிறிது நேரத்தில் மு.க. அழகிரி இடையில் எழுந்து சென்று விட்டார். மாலையில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை.
கட்சியில் சட்ட திட்ட மாற்றம் செய்வது அவருக்கு பிடிக்காததால்தான் வரவில்லை என்று சிலர் பேசிக்கொண்டனர். மாலையில் நடந்த பொதுக் குழுவில் பேசியவர்களில் சில முக்கிய நிர்வாகிகள் 2ஜி அலைவரிசையில் காங்கிரஸ் அரசு தி.மு.க.வை பலிகடா ஆக்கப்பார்க்கிறது. எனவே காங்கிரசுடன் உறவை முறிக்க வேண்டும் என்றனர்.
குற்றச் சாட்டு கூறப்பட்டுள்ள ஆ. ராசாவுக்கு தி.மு.க. ஆதரவு கொடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டது. வீரபாண்டி ஆறுமுகம் பேசும்போது, கட்சி நிர்வாகிகள் பெயரை எல்லாம் குறிப்பிட்டார். ஆனால் மு.க. ஸ்டாலின் பெயரை சொல்லவில்லை. இதற்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக சிலர் கோஷமிட்டனர். தொடர்ந்து பேசிய வீரபாண்டி ஆறுமுகம், அவர் பெயரை சொல்ல மறந்து விட்டேன். மு.க. அழகிரியும், மு.க. ஸ்டாலினும் எனக்கு ஒன்றுதான். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிள்ளைகளான இருவரும் இரண்டு கண்கள். சிலர் தங்களுக்கு சாதகமான முடிவு வரவேண்டும் என்று கருணாநிதியை நிர்பந்தம் செய்கிறார்கள்.
ஒருவரை மட்டும் அடையாளப்படுத்துவதை நாம் அடையாளப்படுத்தக்கூடாது என்றார். இதற்கு தொண்டர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மு.க. ஸ்டாலினை தலைவராக அறிவிக்கவேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோஷம் போட்டார்கள்.அவர்கள் மேடையை நோக்கி சென்றதால் பெரும் சல சலப்பு ஏற்பட்டது.
நடந்த சம்பவத்தை கண்டு கருணாநிதி அதிர்ச்சி அடைந்தார். மேடையில் இருந்த மு.க. ஸ்டாலின் எதுவும் செய்ய முடியாத நிலையில் பார்த்துக்கொண்டிருந்தார். பொதுக்குழுவில் ஏற்பட்ட குழப்பத்தால் வருத்தம் அடைந்த கருணாநிதி மேடையில் இருந்து செல்ல முயன்றார். அவரை அன்பழகனும், மு.க. ஸ்டாலினும் சமாதானம் செய்து உட்கார வைத்தனர்.
கோஷம் எழுப்பியவர்களை அமைதியாக இருக்கும்படி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். பின்னர் அன்பழகன், “தி.மு.க. தலைமை பதவியை குறிப்பிட்ட யாருக்கும் கொடுத்து விட முடியாது. என்னை விட வயது குறைந்த கருணாநிதி தி.மு.க. தலைவராக வந்தபோது எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. பிறகு நானே அவரை தலைவராக ஏற்றுக்கொண்டேன். அவரைப்போன்ற அறிவுப்பூர்வமானவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இல்லை. இதுவரை நடந்த பொதுக்குழுவில் இது போன்ற கூட்டத்தை நான் பார்த்தது இல்லை. அனைவரும் அமைதி காக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து அமைதி ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:-
அமைதியாக நடந்த பொதுக்குழுவில் களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏதோ மு.க. ஸ்டாலின் ஆதரவாளர்கள் போல காட்ட சிலர் குரல் கொடுத்தனர். வேண்டுமானால் அடுத்த பொதுக்குழுவின்போது நானும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். அப்போது யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்று பார்க்கிறேன். இதை அறை கூவலாக விடுக்கிறேன்.
பதவிக்கு யாரும் தானாக வந்து விட முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்டுதான் வர முடியும். காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம் என்று பலர் பேசினார்கள். பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணிக்கு முயற்சி நடக்கிறது. நமது கொள்கை சிறுபான்மை மக்களை காப்பது. எனவே, பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு இதை எதிர்பார்க்க முடியாது.
கனிமொழி, ராசா ஆகியோரைவிட இந்திய இறையாண்மைக்காகவே நான் அதிகம் கவலைப்படுகிறேன். இப்படி சொல்வதால் காங்கிரஸ் கட்சிக்கு வக்கலாத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
இன்னமும் பதவியில் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்க தாத்தாவுக்கு ஆசை.நரகத்திற்குப் போகப் போகும் தாத்தா அங்கிருந்தும் ஆட்சி நடத்துவாரா?
ReplyDelete