சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் ஜவஹர் சூரியகுமார் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட ருசிகர தகவல் வெளியாகியுள்ளது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 17ம் தேதி மாலை நடந்தது. இதில் 8 பெண்கள் உட்பட மொத்தம் 41 பேர் கலந்து கொண்டனர்.
நேர்காணலின் போது திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் பொதுச் செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, துணைப் பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், சற்குணபாண்டியன், வி.பி.துரைசாமி, நெல்லை மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் கொண்ட குழு வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டது.
நேர்காணல் முடிந்த பிறகு வேட்பாளர் பெயர் ஜவஹர் சூரியகுமார் என்று அறிவிக்கப்பட்டது. மு.க.அழகிரி ஆதரவாளர்களோ அல்லது மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களோ வேட்பாளராக வந்துவிடக் கூடாது என்பதில் திமுக தலைவர் கருணாநிதி உறுதியாக இருந்தாராம்.
அதனால் தான் இருதரப்பு ஆதரவாளர்களையும் புறகணித்துவிட்டு, தனது ஆதரவாளரான ஜவஹர் சூரியகுமாரை வேட்பாளராக அறிவித்தாராம். ஜவஹர் சூரியகுமார், முன்னாள் மத்திய அமைச்சர் எம். அருணாச்சலத்தின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் வேட்பாளராக தேர்வு பெற்று அறிவாலயத்தை விட்டுக் கிளம்பிய சூரியகுமார், அழகிரியுடன்தான் இணைந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment