தமிழ்த் திரையுலகம் கண்ட ஒப்பற்ற நடிகைகளில் ஒருவரான எஸ்.என்.லட்சுமி மரணமடைந்துள்ளார்.
பெரிய ஹீரோவாக இருந்தால்தான் உண்டு, பெரிய ஹீரோயினாக இருந்தால்தான் பரிமளிக்க முடியும் என்பதெல்லாம் கிடையாது. சாதாரண வேடங்களில் வந்து போகும் பலர் தங்களது அபார நடிப்பால் அசத்தி விடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் முக்கியமான இடத்தில் இருப்பவர் லட்சுமி.
தமிழ்த் திரையுலகம் கண்ட சிறப்பான நடிகைகளில் இவருக்கும் தனி இடம் உண்டு. 85 வயது குடு குடு பாட்டியானாலும் கூட தனது நடிப்பை விடாமல், தொடர்ந்து வந்தவர் லட்சுமி.
அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கே அம்மாகவாக நடித்து அசத்தியவர். இந்தக் காலத்து நடிகர்களுடனும் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். துலாபாரம் படத்தில் இவரது கேரக்டர் அனைவரையும் கண்ணீர் விட வைத்தது. இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 1000. ஆனால் அதில் இவரது நடிப்பு பல ஆயிரம் படங்களுக்குச் சமமானது.
சமீப காலமாக டிவி தொடர்களில் நடித்து வந்த எஸ்.என்.லட்சுமி, ஒரு படப்பிடிப்பின்போது வழுக்கி விழுந்து விட்டார். இதில் அவரது முதுக் தண்டுவடத்தில் அடிபட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்போடு வாழ்ந்து வந்தவர் லட்சுமி. தனது சாலிகிராமம் வீட்டில் அண்ணன் பேத்திகளோடு வசித்து வந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். நாளை உடல் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் சென்னல்குடிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.
நாடகங்களிலேயே அசத்தியவர்
ஆரம்ப காலத்தில் இவர் நாடக நடிகையாக இருந்தார். என்.எஸ்.கேவின் நாடகக் குழுவில் இணைந்து நடித்து வந்தார். பின்னர் கே.பாலச்சந்திரன் ராகினி ரீக்ரியேஷன்ஸ் உள்ளிட்டவற்றிலும் இடம் பெற்று நடித்தார்.
நாடகத்தில் நடித்தபோதே தனது நடிப்பாற்றலால் அனைவரையும் வியக்க வைத்தவர் லட்சுமி. பெண்களே நடித்த நாடகம் ஒன்றில் இவர் ஸ்டண்ட் காட்சிகளிலும், பல்டி அடிக்கும் காட்சிகளிலும் நடித்து அசத்தினாராம். சண்டையை முறையாகவும் கற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கத்திச் சண்டை பிரமாதமாகப் போடுவாராம்.
எம்.ஜி.ஆர் நடித்த பாக்தாத் திருடன் படத்தில் இவர் சிறுத்தையுடனும் கூட சண்டை போட்டு நடித்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இவர் நடித்த முதல் படம் எது என்றால் அது நல்ல தங்காள். ஆனால் சர்வர் சுந்தரம்தான் இவருக்குப் பிரேக் கொடுத்த படமாகும். சர்வர் சுந்தரத்தில் இவரது பாத்திரத்தை யாரும் மறக்க முடியாது.
பின்னாளில் கமல்ஹாசனின் ஆஸ்தான நடிகையாக மாறிப் போனார் லட்சுமி. தேவர் மகனில் ஆரம்பித்து விருமாண்டி வரை கிட்டத்தட்ட கமல்ஹாசனின் அத்தனைப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் இவர் நடித்த அந்த திருட்டுப் பாட்டி கேரக்டரை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது. அதேபோல மகாநதியில் கமல்ஹாசனின் மாமியாராக வந்து அனைவரையும் கவர்ந்தார்.
அதேபோல மணிரத்தினமும் இவரை தனது படங்களில் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக அக்னிநட்சத்திரம் படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.
No comments:
Post a Comment