தே.மு.தி.க., பொதுக் குழு நாளை நடக்கிறது. அதற்குள், யாரும் கட்சி தாவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, தே.மு.தி.க., மாநில நிர்வாகிகளுக்கு, விஜயகாந்த் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நூலறுந்த பட்டம்
சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து, உள்ளாட்சி தேர்தலில் பிரிந்தாலும், அ.தி.மு.க., - தே.மு.தி.க.,வினர் இடையே நட்பு இருந்து வந்தது. சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதாவிற்கும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கும் இடையே நடந்த நேரடி வாக்குவாதம், இந்த நட்புறவை முறித்துள்ளது.தே.மு.தி.க.,வில் இருந்து ஆட்களை இழுக்கும் வேலைகளை, அ.தி.மு.க., பிரதிநிதிகள் துவக்கியுள்ளனர். சமீபத்தில் தே.மு.தி.க., தொழிற்சங்க மாநில நிர்வாகி வேல்முருகன் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.இவர்கள் அனைவரும் நிச்சயம் வெளியேறுவர் என, சில மாதங்களுக்கு முன்பே தகவல் கசிந்தும், அதை, தே.மு.தி.க., தலைமை பொருட்படுத்தாமல் இருந்தது. கட்சி பதவியிலேயே அவர்கள் நீடித்ததால், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணையும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.
ஏமாற்றதே ஏமாறாதே
அதன் பிறகு, தே.மு.தி.க., தலைமை சுதாரித்துக் கொண்டுள்ளது. இருப்பினும், நாளை (21ம் தேதி) சென்னையில், தே.மு.தி.க., பொதுக்குழு கூடும் நாளில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிலர், கட்சி தாவ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் யார் என்று கண்டறிந்து, சமரசம் செய்து, "ஒரு இனிய உதயம்' காத்திருக்கிறது, "நம்பினார் கெடுவதில்லை' என அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, தொடர்ந்து கட்சியிலேயே நீடிக்கச் செய்ய வேண்டும் என, விஜயகாந்த் ரகசிய உத்தரவிட்டுள்ளார்.
மாமன் மச்சான்
இந்த சமரச பணிகளை தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள் சுதீஷ், சந்திரக்குமார், பார்த்தசாரதி அடங்கிய குழுவினர், ரகசியமாக செய்து வருகின்றனர். சமரச பேச்சுக்குப் பிறகும் பொதுக்குழு நாளில், கட்சி தாவல் நடக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால்,"காலையும் நீயே மாலையும் நீயே' என, சில முக்கிய நிர்வாகிகள், தே.மு.தி.க., என்ற,"அகல்விளக்கை' அணையாமல் பார்த்துக் கொள்ளும்படி பணிக்கப்பட்டுள்ளனர்.
"பொறுத்தது போதும்' கடலூரில் கிளம்பிட்டாங்க!
தே.மு.தி.க., நிர்வாகிகள் நியமனத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் கடலூரில் கட்சிக் கொடி அகற்றப்பட்டது.
கடலூர் வடக்கு மாவட்ட தே.மு.தி.க.,விற்கான நிர்வாகிகள் பட்டியலை நேற்று முன்தினம் மாலை கட்சித் தலைமை அறிவித்தது. இது மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இந்நிலையில், மாநில பொதுக்குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்ட கடலூர் பாதிரிக்குப்பம் சிவராஜ், கட்சியிலிருந்து விலகப் போவதாக நேற்று காலை அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் பாதிரிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் திடலில் ஏற்றப்பட்டிருந்த தே.மு.தி.க., கொடியை இறக்கியதோடு, கொடிக் கம்பத்தையும் கழற்றி எடுத்துச் சென்றனர். மேலும், அங்கிருந்த கல்வெட்டில் கறுப்பு பெயிண்டை அடித்து பெயர்களை அழித்தனர்.
இதுகுறித்து சிவராஜ் கூறியதாவது:
கடந்த முறை எனக்கு, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதனால் இந்த முறை, மாநிலச் செயற்குழு உறுப்பினர் அல்லது மாவட்டத் துணைச் செயலர் பதவி கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால், மாவட்டச் செயலரான சிவக்கொழுந்து எம்.எல்.ஏ., பணத்தை வாங்கிக் கொண்டு, சமீபத்தில் கட்சிக்கு வந்தவர்களுக்கு நல்ல பதவியை வாங்கிக் கொடுத்துள்ளார். ரசிகர் மன்றத்திலிருந்து தொடர்ந்து கட்சிக்காக உழைத்து வரும் என்னைப் போன்றவர்கள், ஓரம் கட்டப்பட்டு வருகின்றனர்.இதன் காரணமாகவே நானும், எனது ஆதரவாளர்களும் தே.மு.தி.க.,விலிருந்து விலகுகிறோம். இங்கு அமைக்கப்பட்டிருந்த தே.மு.தி.க., கொடிக் கம்பத்தையும் அகற்றி விட்டேன் . மேலும் பலர் கட்சியிலிருந்து விலக உள்ளனர்.இவ்வாறு சிவராஜ் கூறினார்.
No comments:
Post a Comment