கனடா நாட்டில் இலக்கிய படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் இயல் விருதை பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு உயிர்மை பதிப்பகம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தலைமை தாங்கினார். விழாவில், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, பேராசிரியர் ஞானசம்பந்தம், எழுத்தாளர் ஏ.பெருமாள், ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளருமான இறையன்பு, விஜயசங்கர் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஏற்புரை வழங்கினார். கனடாவில் தனக்கு வழங்கப்பட்ட இயல் விருதை, ரஜினிகாந்த் வழங்க, அதை எஸ்.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:-
ஒரு எழுத்தாளனுக்கு, என் நண்பருக்கு, ஒரு மொழியை முற்றிலுமாக தெரிந்த ஒரு படைப்பாளிக்கு நடக்கும் பாராட்டு விழாவில் நான் வந்து கலந்து கொண்டு பாராட்டுவதை நினைக்கும்போது, சந்தோஷம், ஆச்சரியம் அதே நேரம் பயமும் கூட...
எல்லாம் அறிஞர்கள் வந்திருக்கும் இந்த சபையில் நான் என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்தேன். நெருக்கடியான நிலை வரும்போது நீ கற்றுக் கொண்ட வித்தை எல்லாம் மறந்து போகும் என்பது பரசுராமன், கர்ணனுக்கு கொடுத்த சாபம். அதுபோல இப்போது வாழ்த்தி பேச வேண்டும் என்ற நேரத்தில் எந்த மொழியிலும் பேச முடியவில்லை.
உடல் நிலை சரியில்லாமல் இருந்து, பின்னர் குணமடைந்த பிறகு எஸ்.ராமகிருஷ்ணனை சந்திக்க நினைத்து அவரை தொடர்பு கொண்டேன். அப்போது அவர் ரஷ்யா, ராமேஸ்வரம் என்று சுற்றிக் கொண்டே இருந்தார். 7 நாட்களுக்கு முன்பு என்னை தொடர்பு கொண்டு, இப்போது சென்னையில்தான் இருக்கிறேன் என்றார்.
நாங்கள் இருவரும் காரில் வெகு தூரம் பயணம் செய்தபடி பேசிச் சென்றோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு, 2002-ம் ஆண்டு நடந்த பாபா படம் தொடர்பாக அவரை சந்தித்து பேசினேன். பாபா படத்துக்கு நான்தான் கதாசிரியர். அவரிடம் நான் பேசியபோது நான் காணாத, கேக்காத, அறியாத பல விஷயங்களை கூறினார். அந்த படம் முதல் சந்திரமுகி படம் வரை மறக்க முடியாத காலம்.
துன்பம் வரும்போதுதான் மனிதனுக்கு யோசிக்கும் சக்தியே வருகிறது. அந்த படத்தில் இருந்த சில காட்சிகளை புத்தகமாக வெளியிட முடிவு செய்து ராமகிருஷ்ணனிடம் பேசினேன். எனக்கு தமிழ் எழுத தெரியாது, ஆங்கிலம் அவ்வளவாக வராது, தெலுங்கு மறந்துவிட்டது. எனவே, இவரிடம் எழுதி கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டார்.
10 முதல் 12 நாட்களுக்கு பிறகு என்னிடம் புத்தகத்தை கொண்டு வந்தார். அதை படித்து பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இருந்தாலும், அந்த புத்தகத்தில் உண்மைகள் இருந்ததால், அது பலரை நோகடிக்கும் என்று வெளியிடவில்லை. இப்படி குடும்பத்தை பற்றி எந்த கவலையும் இல்லாமல் படிப்பு, எழுத்து என்று சென்று கொண்டே இருக்கிறார். ஒரு வயது குழந்தைபோல் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் ரசிக்கிறார்.
ஏராளமான புத்தங்களை படித்திருக்கிறார். அனுபவங்களுக்காக பயணம் செய்து கொண்டே இருக்கிறார்.
சமீபத்தில் நான் படித்த புத்தகத்தில் இருந்த கதை. ஒரு தனி விமானத்தில் விஞ்ஞானிகள் பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஒருவர் மட்டும் பைபிளை படித்துக் கொண்டு இருந்தார். அவரைப் பார்த்து மற்றொரு விஞ்ஞானி, இப்போது உள்ள அறிவியல் உலகத்தில் கடவுள், பைபிள் என்று படித்துக் கொண்டு இருக்கிறீரே? என்று கேட்டு விட்டு, தனது முகவரியை கொடுத்து, இனியாவது கடவுளை தூக்கிப் போட்டு விட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கூறிவிட்டு சென்றார்.
விமானம் தரை இறங்கியவுடன் மீண்டும் அவரை சந்தித்த விஞ்ஞானி உங்கள் முகவரியை கொடுங்கள் நான் முடிந்தால் வந்து பார்க்கிறேன் என்றார். அவர் தனது விசிட்டிங் கார்டை கொடுத்தார் அதில் தாமஸ் ஆல்வா எடிசன் என்று இருந்தது. உடனே அவரிடம் மன்னிப்பு கேட்டதுடன், அவரை தனியாக வீட்டில் சந்திக்க நாளையும் பெற்றுக் கொண்டு சென்றார்.
குறிப்பிட்ட நாளில் அந்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் வீட்டுக்கு சென்றார். அங்கு ஏராளமான கண்டுபிடிப்புகள் இருந்தன. அவற்றை பார்த்து நீங்கள்தானே இதை செய்தது என்று கேட்டார். அதற்கு அவர் இல்லை நான் ஒரு நாள் வெளியில் சென்றுவிட்டு, மீண்டும் வந்து வீட்டு கததை திறந்தபோது இதெல்லாம் இருந்தது என்றார்.
படைப்பு இருந்தால் கண்டிப்பாக படைப்பாளியும் இருப்பார் என்று விஞ்ஞானி கூறினார். பின்னர் தாமஸ் ஆல்வா எடிசன் தான் கண்டுபிடித்தை ஒப்புக்கொண்டார். இது கதையாக நினைக்க வேண்டாம் விஞ்ஞானி கூறியதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
படைப்பு என்று ஒன்று இருந்தால் அதை படைத்த படைப்பாளியும் கண்டிப்பாக இருப்பார். எனவே கடவுள் இருப்பது உண்மை. கடவுள் இருக்கிறார் என்பதை கூற இந்த கதை ஓட்டம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதுபோல் தான் சொல்ல வரும் கருத்தை சரியான கதை ஓடுகளத்தில் கூறுபவர் ராமகிருஷ்ணன்.
கவிஞர் கண்ணதாசன் நாத்திகராக இருந்தபோது, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். அப்போது எரிக்க போகும் முன்பு இதை படித்து விட்டு எரிக்கலாம் என்று முடிவு செய்து கம்பராமாயணத்தை படித்தார். பின்னர் அவர் அந்த புத்தகத்தை வைக்கவே இல்லை. முழுவதுமாக படித்து முடித்துவிட்டு அதன் முன்பு விழுந்து வணங்கினார்.
நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறினார். எழுத்துக்கு, வார்த்தைக்கு அவ்வளவு சக்தி உள்ளது. படைப்புகளுக்கே இவ்வளவு சக்தி என்றால், படைப்பாளிகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கும். நாம் படைப்பாளிகளை நன்றாக வைத்திருந்தால், அவர்கள் பல நல்ல படைப்புகளை தந்து கொண்டே இருப்பார்கள்.ராமகிருஷ்ணன் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
விழாவில், கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment