ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் ஆ. ராசா போல மத்திய உள்துறை மந்திரி ப. சிதம்பரத்துக்கும் பங்கு இருக்கிறது என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி குற்றம் சுமத்தினார். எனவே ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும். சம்மன் அனுப்பி அவரை கோர்ட்டுக்கு அழைத்து விசாரிக்கவேண்டும். அவரிடம் சிபிஐயும் விசாரணை நடத்தவேண்டும் என்று சுப்பிரமணியசாமி கோரிக்கை விடுத்தார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை நடந்து வரும் டெல்லி சிபிஐ சிறப்புக் கோர்ட்டில் இது தொடர்பாக அவர் கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார். ப. சிதம்பரத்தை இந்த வழக்கில் சேர்க்க தேவையான ஆவணங்களையும் சுப்பிரமணியசாமி தாக்கல் செய்தார். இதன் மீது 4-ந்தேதி (இன்று) தீர்ப்பளிப்பதாக சிபிஐ கோர்ட்டு நீதிபதி சைனி கூறி இருந்தார்.
இதற்கிடையே சுப்பிர மணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மற்றொரு வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப. சிதம்பரத்தை விசாரிக்க வேண்டுமா? என்பதை சிபிஐ கோர்ட்டே முடிவு செய்யும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் சிபிஐ கோர்ட்டு என்ன தீர்ப்பு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நாடெங்கும் ஏற்பட்டது. வழக்கு தொடர்ந்துள்ள சுப்பிரமணியசாமி இன்று காலை 9.45 மணிக்கெல்லாம் கோர்ட்டுக்கு வந்து விட்டார்.
சிறிது நேரத்தில் நீதிபதி சைனியும் வந்ததால் காலை 10 மணிக்கு தீர்ப்பு வாசிக்கப்படும் என்று கருதப்பட்டது. ஆனால் மதியம் 12.30 மணிக்கு தீர்ப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 12.30 மணியளவில் சுப்பிரமணியசாமி மீண்டும் கோர்ட்டுக்கு வந்தார். மனுதாரர் என்ற அடிப்படையில் அவரும், அரசு வக்கீலும் மட்டும் கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பத்திரிகை நிருபர்கள் கோர்ட்டுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது.இதனால் நீதிபதி சைனி வாசித்த தீர்ப்பு விவரம் உடனடியாக தெரியவில்லை. தீர்ப்பை அறிந்து கொள்வதற்காக ஏராளமானவர்கள் சிபிஐ. கோர்ட்டு ஜன்னல் பகுதியில் குவிந்தனர். அவர்கள் உள்ளே எட்டி பார்த்தபடி இருந்தனர். அவர்களையும் வெளிளேற்ற நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டார்.
இதனால் மதியம் 1 மணி முதல் 1.15 வரை சிபிஐ. கோர்ட்டு வளாகத்தில் குழப்பமாக காணப்பட்டது. மதியம் 1.30 மணிக்கு தீர்ப்பு விவரம் தெரிய வந்தது. சுப்பிரமணியசாமி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சைனி உத்தரவிட்டார்.
நீதிபதி தன் தீர்ப்பில், "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மத்திய மந்திரி ப. சிதம்பரத்துக்கு பங்கு உள்ளது என்பதை ஏற்க இயலாது. அவரை விசாரிக்க வேண்டிய தேவை இல்லை. எனவே சுப்பிரமணியசாமியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்றார்.
சிபிஐ கோர்ட்டின் தீர்ப்பு காரணமாக மத்திய மந்திரி ப. சிதம்பரத்துக்கு நிலவி வந்த நெருக்கடி இன்று மதியத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த தீர்ப்பு மூலம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுக்கும் ப. சிதம்பரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உணர்த்தப்பட்டுள்ளது. ப. சிதம்பரத்துக்கு எதிராக தீர்ப்பு வந்திருக்குமானால், அது மத்திய அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் சூழ்நிலை இருந்தது. சுப்பிரமணியசாமி மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரிய கண்டத்தில் இருந்து தப்பி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் இன்று மதியம்தான் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.
ReplyDelete