தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி புரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு 13 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் தினக்கூலியாக இனி ரூ 132 ரூபாய் பெறுவார்கள் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரகப் பகுதிகளில் திறன்சாரா, உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள, வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆண்டில் 100 நாட்களுக்குக் குறையாமல் வேலை வாய்ப்பினை அளிப்பதாகும். மேலும், இத்திட்டத்தின் மூலம் நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல், காடு வளர்ப்பு ,மரம் நடுதல், ஏரி மற்றும் குளங்களை தூர்வாரல் போன்ற பல்வேறு கிராம நலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சம்பள உயர்வு தொடர்பான விவரத்தில்; தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு ரூ. 119 பெற்று வருகின்றனர். இந்த சம்பளத்தில் கூடுதலாக ரூ. 13 அதிகரித்து 132 ஆக வழங்கப்படும். இந்த உயர்வு மூலம் 25 லட்சம் பேர் பயனடைவர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே முதல்வர் விடுத்துள்ள மற்றொரு அறிக்கையில் விவசாய பணிகளை கருத்தில் கொண்டு வரும் 25 ம் தேதி முதல் பெரியாறு அணையில் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். 120 நாள் வரை வரும் இந்த தண்ணீர் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலம் பயன்பெறும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment