முன்னாள் துணை முதல்-அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலினின் மருமகள் கிருத்திகா உதயநிதி பெயரில் மோசடி நடப்பதாகவும், இது போன்ற மோசடி காரியங்களுக்கு அவர் பொறுப்பு அல்ல என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு, வக்கீல் ரமன்லால் மூலம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும்படி டி.ஜி.பி அலுவலகத்திலும் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இது போன்ற மோசடியில் ஈடுபட்டதாக, பிரபல பலகுரல் மோசடி மன்னன் தினேஷ்குமார் (வயது 21) என்பவரை, சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா ரோட்டில் வைத்து போலீசார் மடக்கிப்பிடித்தனர். தினேஷ்குமாரை பிடிக்க சினிமா இணை இயக்குனர் குமரேசன் என்பவர் போலீசுக்கு உதவி செய்தார். காரணம் குமரேசன், தினேஷ்குமாரின் மோசடி வலையில் சிக்கி ரூ.50 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார்.
இதுபற்றி குமரேசன் திருவல்லிக்கேணி போலீசில் கொடுத்த புகாரில், 'நான் சினிமாவில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறேன். ஒளி, வசந்தம் வந்தாச்சு, சைவப்பூனை போன்ற படங்களில் நான் பணிபுரிந்துள்ளேன். சமீபத்தில் ஒருநாள், கிருத்திகா உதயநிதி பேசுவதுபோல எனது செல்போனில் ஒருவர் பேசினார். எனது கணவரின் பட நிறுவனமான "ரெட்ஜெயண்ட் மூவிஸ்'' தயாரிக்கும் படங்களில் உங்களுக்கு இணை இயக்குனர் பொறுப்பு தரப்படும், என்று கூறினார்.
இதையடுத்து, கிருத்திகாவின் தம்பி இன்பநிதி என்று பேசிய இன்னொருவர் என்னிடம் இணை இயக்குனர் பதவிக்காக ரூ.1 லட்சம் பணம் வேண்டும் என்றார். இதை நம்பி நானும், ரூ.50 ஆயிரம் பணத்தை முன்பணமாக கொடுத்தேன். மீதி ரூ.50 ஆயிரம் பணத்தை கேட்டு, இன்பநிதி என்று பேசிய நபர் தொடர்ந்து போனில் பேசி தொல்லை கொடுத்து வந்தார். இதற்கிடையில் கிருத்திகா பெயரில் மோசடி நடப்பதாக செய்திகள் வந்ததால், நான் மீதி பணத்தை கொடுக்கவில்லை.நான் ஏற்கனவே கொடுத்த ரூ.50 ஆயிரம் பணத்தை திருப்பிக்கேட்டேன். அந்த பணத்தை திருப்பித்தருவதாக, திருவல்லிக்கேணி வாலாஜா ரோட்டுக்கு வருமாறு என்னை இன்பநிதி என்று பேசியவர் அழைத்தார். அவ்வாறு பணத்தை வாங்க வந்தபோது தான் மோசடி நபர் தினேஷ்குமார் பிடிபட்டார். அவர் மீது நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை வசூலித்து தருமாறு வேண்டுகிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட மோசடி நபர் தினேஷ்குமார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர். 10-வது வகுப்பு பெயிலான அவர் பலகுரலில் பேசுவதில் மன்னர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘எனது மோசடிக்கு தி.மு.க. மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஒருவர்தான் பின்னணி. அவரது தூண்டுதலால்தான் நான் மோசடி செய்தேன். ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் தனது சகோதரியை பார்க்க வரும்போது அவர் எனக்கு பழக்கமானார். கிருத்திகா உதயநிதியை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தபோது, அவரது குரலை எனது மனதில் பதிவு செய்துகொண்டேன்.
பின் மகளிர் அணி செயலாளர் சொன்னபடி கிருத்திகா பெயரில் பேசி மோசடிக்கு துணை போனேன். இதுபோல பேசி 6 முன்னாள் அமைச்சர்களிடம் வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு காரியங்களை அந்த மகளிர் அணி செயலாளர் சாதித்துள்ளார். எனது மோசடிக்கு, எனது நண்பன் மணியும் உறுதுணையாக இருந்தான். இதற்காக எனக்கு மாதம் ரூ.7 ஆயிரமும், மணிக்கு ரூ.5 ஆயிரமும் சம்பளமாக மகளிர் அணி செயலாளர் கொடுத்தார். குமரேசனிடம் நானாக இந்த மோசடியில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டேன்’ என்றார்.
தினேஷ்குமார் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மையானது தானா? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். உண்மையாக இருக்கும் பட்சத்தில், குறிப்பிட்ட மகளிர் அணி செயலாளர் மீதும், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் குறிப்பிட்டனர்.நேற்று இரவு தினேஷ்குமாரின் நண்பன் மணியையும் போலீசார் பிடித்தனர். தினேஷ்குமாரின் தந்தை ராமச்சந்திரன் இறந்து விட்டார். தாயார் ராஜலட்சுமி ஸ்ரீரங்கம் கோவிலில் துப்புறவு தொழிலாளியாக வேலை பார்க்கிறார். தங்கை ரேவதி பிளஸ்-1 படிக்கிறார்.
No comments:
Post a Comment