14-வது யூரோ கோப்பை கால்பந்து போட்டிகளை, போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தி வருகின்றன. இத்தொடரின் முதல் மூன்று காலிறுதி ஆட்டங்களில் போர்ச்சுகல், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய அணிகள் வென்று அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில் நான்காவது மற்றும் கடைசி காலிறுதிப் போட்டி உக்ரைனின் கீவ் நகரிலுள்ள ஒலிம்பிஸ்கி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து-இத்தாலி அணிகள் மோதின. இங்கிலாந்து அணியில் வெய்ன் ரூனி, ஸ்டீவன் ஜெரார்ட், வல்கோட் போன்ற ஜாம்பவான்கள் விளையாடினர். இத்தாலி தரப்பில் பலோடெல்லி போன்ற சிறந்த வீரர்கள் இடம்பெற்றனர்.
இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் போட்டி ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடந்தது. மேலும் இரு அணிகளிலும் பல சிறந்த வீரர்கள் இடம்பெற்றிருந்ததாலும் போட்டி பரபப்புக்கு பஞ்சமின்றி நடந்தது. அதிலும் குறிப்பாக இத்தாலி வீரர் பலோடெல்லியின் ஆட்டம் அபாரமாக இருந்தது. எனினும் முதல் பாதியில் இரு அணியினரும், கோல் அடிப்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாயின. இரு அணியின் கோல் கீப்பர்களும் சிறப்பாக செயல்பட்டு, எதிரணியினரின் முயற்சிகளைத் தடுத்தனர்.
இரண்டாவது பாதியில் ஆட்டம் மேலும் பரபரப்பான கட்டத்தை எட்டியது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயன்று, இயலாமல் போவது தொடர்ந்து நடந்தவண்ணம் இருந்தது. 90 நிமிடங்களின் முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்க முடியாமல் போனதால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
கூடுதல் நேரத்திலும் இரு அணி வீரர்களும் விடாமல் மல்லுக்கட்டினர். கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களில் கூட கோல் எதுவும் அடிக்கப்படாததால் போட்டியின் முடிவை நிர்ணயிப்பதற்காக, ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் வரை சென்றது.
இங்கிலாந்து அணியின் முதல் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பை நட்சத்திர வீரர் ரூனி வீணடித்தார். பதிலுக்கு இத்தாலி வீரர் பலோடெல்லி அபாரமாக கோல் அடித்தார். இரண்டாவது வாய்ப்பில் இங்கிலாந்து வீரர் ஜெரார்ட் கோல் அடிக்க, இம்முறை இத்தாலி வீரர் கோல் அடிக்க தவறினார். இதனால் இரண்டு அனிகளும் 1-1 என சமநிலை வகித்தன.
மூன்றாவது வாய்ப்பில் இங்கிலாந்தின் ரூனி, கச்சிதமாக கோல் அடித்தார். இம்முறையும் இத்தாலி பதில் கோல் திருப்பியது. 4-வது மற்றும் 5-வது வாய்ப்பை இங்கிலாந்து வீரர்கள் தவறவிட, இத்தாலி அணியோ இருமுறையும் கோல் அடித்து 4-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் இத்தாலி அணி யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி அணி, வலுவான ஜெர்மனியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் வரும் 29-ம் தேதி நடக்கிறது. முன்னதாக வரும் 28-ம் தேதி நடக்க உள்ள முதலாவது அரையிறுதியில் போர்ச்சுகல் அணி, ஸ்பெயின் அணியுடன் மோதுகிறது. இதையடுத்து அரையிறுதிப் போட்டிகளில் வெல்லும் அணிகள் ஜூலை 1-ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் மோத உள்ளன.
இன்றைய போட்டியில் தோற்றதன் மூலம், முதல்முறையாக யூரோ கோப்பையை வெல்லும் இங்கிலாந்து அணியின் கனவு இம்முறையும் பொய்த்துள்ளது.
No comments:
Post a Comment