ஆந்திராவில் சமீபத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது. மேலும் நெல்லூர் எம்.பி. தொகுதியிலும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றது. இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட படுதோல்வி, கட்சி தலைமையை அதிர வைத்தது.
ஜெகனின் அசுர வளர்ச்சியை சமாளிக்க, ஏற்கனவே முதல்வராக இருந்த ரோசய்யாவை நீக்கி விட்டு கிரண் குமார் ரெட்டியை காங்கிரஸ் மேலிடம் முதல்வராக்கியது. தற்போது அவராலும் ஜெகனின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத நிலையில், மாநிலத்தில் காங்கிரசை பலப்படுத்த கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. இதற்காக, முதல்வர் கிரண்குமாரை மாற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், சமீபத்தில் காங்கிரசில் சேர்ந்த நடிகர் சிரஞ்சீவி டெல்லியில் நேற்று சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அவரை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர்கள் பலரும் சோனியாவை சந்திக்க உள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் ஆந்திர காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் பிரணாப்புக்கு கிடைப்பதை உறுதி செய்யவே இவர்கள் முகாமிட்டிருப்பதாக கூறப்பட்டாலும், முதல்வரை மாற்றும் கோரிக்கையுடன் இவர்கள் டெல்லியில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் சிரஞ்சீவியின் தலைமையை ஏற்க தயார் என்று கூறியுள்ள நிலையில், சோனியாவை அவர் சந்தித்து பேசியிருப்பது, அவர் ஆந்திர முதல்வர் ஆவரா? என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சோனியாவை சந்தித்த பின் வெளியே வந்த சிரஞ்சீவியிடம் ஆந்திர முதல்வராவீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் ஏதும் கூறாமல் சென்று விட்டார்.
No comments:
Post a Comment