அதிமுக அரசுக்கு எதிராக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ள சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் தப்புவது எப்படி என திமுக முன்னணி நிர்வாகிகள் சிலர் சக நண்பர்களிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பெரும் பரபரப்புக்கு மத்தியில் திமுக செயற்குழுக் கூட்டம் கடந்த 22ம் தேதி அக்கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. அதிமுக ஆட்சிக்கு வந்த பின்பு திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பாய்ந்த வண்ணம் உள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வந்தாலும் மீண்டும் மற்றொரு வழக்கில் கைதாவதும், மீண்டும் ஜாமீனில் வெளியே வருவதும், பிறகு மீண்டும் கைதாவதுமாக உள்ளனர். இவ்வாறு திமுக முன்னணி தலைவர்கள் மீது தொடர்ந்து அதிமுக அரசு அடுத்தடுத்து பொய் வழக்குகள் போட்டு வருவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கூட்டத்தின் இறுதியில் அதிமுக அரசின் அராஜகப் போக்கைக் கண்டித்து ஜூலை 4ம் தேதி மாநிலம் தழுவிய மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவது என்றும், அதில் பெருமளவில் திமுகவினர் கலந்து கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
ஏற்கனவே திமுகவினரை குறிவைத்து கைது செய்யும் அதிமுக அரசு, சிறை நிரப்பும் போராட்டத்தின் போது கூண்டோடு அள்ளிச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தொடர்ந்து 15 நாள் ரிமாண்டில் வைத்துவிட்டால் என்ன செய்வது என்று இப்பொழுதே திமுகவினர் பீதியில் உள்ளனர்.
மேலும் பல முன்னணி தலைவர்கள் எனக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளது, நீண்ட காலம் சிறையில் இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். போராட்டத்திலும் கலந்து கொள்ள வேண்டும், சிறைக்கும் போகக் கூடாது, அதேசமயம் தலைமையிடமும் சபாஷ் பெற வேண்டும், அதற்கு என்ன செயய வேண்டும் என தங்களது நண்பர்களிடமும், வழக்கறிஞர்கள் சிலரிடமும் திமுகவினர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.
மேலும் சிலர் அவசர வேலையாக வெளி மாநிலம் செல்ல வேண்டி இருப்பதாகவும், சிலர் குடும்பத்தோடு நேர்த்திக்கடன் செலுத்த கோவிலுக்கு செல்ல இருப்பதாவும் மாவட்ட நிர்வாகிகளிடம் கூறியதாகத் தெரிகின்றது.
எனவே, சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் பல முன்னணி நிர்வாகிகள் டிமிக்கி கொடுக்க தயாராகி வருகின்றனர்.
No comments:
Post a Comment