தர்மேந்திரா-ஹேமமாலினி மகள் ஈஷா தியோல் திருமணம் தமிழக கலாச்சாரப்படி நடக்கிறது. திருச்சி ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாக கொண்டவர் நடிகை ஹேமமாலினி. தமிழ்ப்பெண்ணான இவர் இந்திப்பட உலகில் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். நடிகர் தர்மேந்திராவுடன் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்தார். பின்னர் தர்மேந்திராவையே ஹேமமாலினி திருமணம் செய்து கொண்டார்.
தர்மேந்திரா ஏற்கனவே திருமணம் ஆனவர். சன்னி தியோல், பாபி தியோல் என்ற 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சன்னி தியோல் சில இந்திப்படங்களில் நடித்தார்.
தர்மேந்திராவை மணந்த பின் ஹேமமாலினி மும்பையில் வசித்து வருகிறார். இவருக்கு ஈஷா தியோல், அகானா என்ற 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஈஷா தியோல். சிறந்த பரதநாட்டிய கலைஞர். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. மணமகன் பரத் தக்தானி.
தொழில் அதிபரான இவர் மும்பை புறநகர் பகுதியில் 5 நட்சத்திர ஓட்டல் உள்பட பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரர். பரத்-ஆஷா தியோல் திருமணம் வருகிற 29-ந் தேதி காலை 7.30 மணிக்கு மும்பையில் உள்ள ஒரு கோவிலில் நடக்கிறது.
தமிழக கலாச்சாரப்படி புரோகிதர்கள் மூலம் கோவிலில் திருமணம் நடைபெறுகிறது. இதில் குடும்பத்தினர் தவிர மற்ற யாருக்கும் அழைப்பு இல்லை. ஹேமமாலினி சென்னை வந்து மணமகளுக்கு தமிழக கலாச்சாரப்படி காஞ்சீபுரம் பட்டுப்புடவை, நகைகள், ஆபரணங்கள் வாங்கிச் சென்றார்.
மும்பை கலாச்சாரப்படி 4 நாள் திருமண விழா நடக்கிறது. இன்று மும்பை நட்சத்திர ஓட்டலில் சங்கீத் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பிரபல இந்தி நட்சத்திரங்கள் தொழில் அதிபர்கள் கலந்து கொள்கிறார்கள்.
வருகிற 28-ந் தேதி மெகந்தி நிகழ்ச்சி ஜூகுவில் உள்ள ஹேமமாலினி பங்களாவில் நடக்கிறது. இதற்கு தனது குடும்ப நண்பர்கள், தோழிகள் என 150 பெண்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழக கலாச்சாரப்படி வாழைமரம், தோரணம் பூக்களால் வீட்டை அலங்கரித்துள்ளனர்.
ஈஷா, அகானா, மணிரத்னத்தின் உதவியாளர் கரன் மற்றும் குடும்பத்தினரது நடன நிகழ்ச்சி நடக்கிறது. தர்மேந்திரா-ஹேமமாலினி நடித்த பழைய இந்திப் பாடல்களுக்கு ஏற்ப ஹேமமாலினியும் நடனமாடுகிறார்.
ஈஷாவின் காஞ்சீபுரம் பட்டுப்புடவையை பிரபல டிசைனர் நீதா லுல்லா வடிவமைத்துள்ளார். கோவிலில் தான் தனது திருமணம் நடக்க வேண்டும் என்பது ஈஷாவின் கனவு. அதன்படி கோவிலில் திருமணம் நடக்க இருக்கிறது. ரசிகர்கள் கூட்டம் வராமல் இருக்க எந்த கோவில் என்பதை வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்கிறார்.
30-ந் தேதி மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியின் சினிமா, அரசியல் பிரபலங்கள், நண்பர்கள் 1000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருமண அழைப்பிதழ் தங்க பேழை போல் வடி வமைக்கப்பட்டுள்ளது. அதில் மணமக்களை ராதா-கிருஷ்ணன் போல் பெயினர் டிங்கில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் பிரமாண்டமான திருமணமாக இருக்கும் என்று மும்பை சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
No comments:
Post a Comment