ஜே.பி.ஜே. நிறுவனத்தில் நிலம் வாங்க பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் மனு அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஜே.பி.ஜே. சிட்டி டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்திற்கு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட இந்தியா முழுவதும் பல மாநிலங்களிலும் 120 கிளை நிறுவனங்கள் உள்ளன. சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் உரிமையாளராக ஜஸ்டின் தேவதாஸ் என்பவர் உள்ளார்.
இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் 1/4 கிரவுண்டு, 1/2 கிரவுண்டு, 1 கிரவுண்டு, 2 கிரவுண்டு என்று இடங்களை சலுகை விலையில் விற்பனை செய்வதாக அறிவித்தது.
இதை நம்பி தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான மக்கள் பல கோடி ரூபாய் வரை பணம் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள தலைமை அலுவலகம் திடீரென மூடப்பட்டது.
மேலும் ஜே.பி.ஜே. நிறுவன அதிபர் ஜஸ்டின் தேவதாஸ் மோசடி வழக்கில் பெங்களூரில் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இந்த நிலையில் ஜே.பி.ஜே. நிறுவனர் ஜஸ்டின் தேவதாஸ் ரூ.1,000 கோடி வரை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் சுமார் 60 பேர் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஜஸ்டின் தேவதாஸ் உள்பட அவரது ரியல் எஸ்டேட் நிறுவன அதிகாரிகள் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
புகார்களின் எண்ணிக்கை அதிகமானதால் இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி டி.ஜி.பி. ராமானுஜம் உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஜே.பி.ஜே., சிட்டி டெவெலப்பர்ஸ் நிறுவனத்தினர் அதிக எண்ணிக்கையில் வீட்டு மனைகளை உருவாக்கி விற்பனை செய்ததில் முறைகேடுகள் நடந்தது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. வீட்டு மனை வாங்க, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்ப கிடைக்காதவர்கள் சென்னை, அண்ணா நகர், இரண்டாவது அவென்யூ, சி-48 என்ற முகவரியில் உள்ள வீட்டுவசதி வாரிய கட்டடத்தில் செயல்படும், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன், அடுத்த ஒரு வாரத்திற்குள் நேரில் ஆஜராகலாம் என்று அவர் அதில் தெரிவி்த்துள்ளார்.
No comments:
Post a Comment