அதிமுக அரசின் அடக்குமுறைக்கு எதிராக திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் 22.06.2012 சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன்,
ஒரு பிடிவாதம், ஆணவம், தான்தோன்றித்தனம், எதையும் செய்யலாம் என்ற எண்ணம், என்ன செய்து என்ன ஆகிவிடும் என்ற எண்ணம், நீதிமன்றத்தையே மதிக்காத ஒரு மனப்பாண்மை, வாய்தா வாங்குவதையே வாடிக்கையாகிவிட்ட ஒரு முதல் அமைச்சர் ஜெயலலிதா என்ற காரணத்தினால், கருத்து விளக்கம் ஜெயலலிதாவுக்கு புரியாது. நீதி நியாயம் அவருக்கு விளங்காது. சட்டமன்ற மரபு அவர் மதிக்காது. ஜனநாயகம் அவர் ஏற்காது. கொடநாடு ஒண்ணுதான் அவர் ஏற்பதே தவிர, வேற நாடு மக்கள் எதையும் மதிப்பதில்லை. எல்லாவற்றையும் விட கலைஞருக்கு இருக்கிற எந்த தகுதியும் ஜெயலலிதாவுக்கு கிடையாது.
பெரியாருடைய சீடர் அது முதல் தகுதி. அண்ணாவினுடைய தம்பி அது இரண்டாவது தகுதி. மிகப்பெரிய எழுத்தாளர் அது அவருடைய சொந்த தகுதி. சட்டமன்றத்திலே 12 முறை வெற்றி பெற்று வந்தவர். அவது வேறு யாரும் பெறமுடியாத தகுதி. பலமுறை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு இன்னாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முதன் முதல் முன்மொழிந்த பெருமைக்குரியவர். எனவே அப்படி இந்த பெருமையிலே எந்த பெருமையிலும் அந்த அம்மையாருக்கு கிடையாது.
இன்னும் சொல்லப்போனால் அந்த அம்மையாருக்கு பெரியாருடைய கொள்கையில் அவருக்கு உடன்பாடு இல்லை. சுயமரியாதை உண்டா. கிடையாது. திராவிட இனப்பற்று உண்டா. இருக்க முடியாது. தமிழை மதிப்பவரா. மதிக்காதவர். தமிழ்நாட்டின் பண்பாட்டுக்கு ஒரு மரியாதை தருபவரா. அதுவும் தருபவர் அல்ல. இன்னும் சொல்லப்போனால் அவர் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று பல நேரத்திலே கருதுகிறார்.
தமிழ்நாட்டு மக்கள் சில நேரங்களிலே ஏமாறுவது உண்மைதான். ஆனால் தொடர்ந்து ஏமாற மாட்டார்கள். தமிழன் சிந்திக்கக் கூடியவன்தான். எண்ணிப்பார்க்கக் கூடியவன்தான், அடியோடு அறிவை இழந்தவிட்டவன் அல்ல. ஆனால் சூழ்நிலை காரணமாக சில நேரத்தில் தமிழக மக்கள் உண்மைகளை புரிநதுகொள்ள முடியாமலோ, அறிந்துகொள்ள முடியாமலோ இந்த நாட்டு மக்கள் ஏமாந்துபோயிருக்கிறார்கள். அப்படி ஒரு நிலையில்தான் கடந்த காலத்திலே அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிற நிலை ஏற்பட்டது. மற்றப்படி கலைஞருக்கோ, எனக்கோ நாம் ஆட்சியிலே இல்லை என்ற கவலை கிடையாது.
கலைஞர் முதல் அமைச்சராக இருந்தால் தான் நான் மதிப்பேன் என்று கிடையாது. அவர் வீட்டின் ரோட்டில் நின்றாலும் நான் மதிப்பேன். முதல் அமைச்சர் இல்ல, பதவியே தேவையில்லை. செல்வாக்கு என்பது தேர்தல் மூலமாக கிடைப்பதுதான் செல்வாக்கு என்று எண்ணக்கூடாது. தமிழுக்கு தொண்டு செய்தவர் அதற்கே அவரை மதிக்கலாம். தமிழனுடைய இன உணர்வை வளர்த்தவர் அதற்கே மதிக்கலாம். கல்லக்குடி போராட்டத்திலே தலை வைத்து ரயில் வருவதற்கு முன்பு தலை வைத்து படுத்தவர் அதற்கே மதிக்கலாம். 16 வயதிலேயே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கொடிபிடித்தவர் அதற்கே மதிக்கலாம். தமிழ்நாட்டு தலைவர்களிலேயே அதிக முறை சிறைச்சாலைக்கு சென்றவர் அதற்கே மதிக்கலாம். சிறைச்சாலைக்கு போகுவதற்குக்கூட புதுப் புது வழி கண்டுப்பிடித்தவர் அதற்கே மதிக்கலாம். எனவே இப்படி அரசியலில் உள்ள வித்தகர்களுக்கெல்லாம் வித்தகராக விளங்குகிற கலைஞரை எத்தனையோ விஷயங்களுக்கு மதிக்கலாம்.
ஆனால் இன்றைய முதல் அமைச்சர் தமிழ்நாட்டுக்கு பழியாக வந்திருக்கிறார். அண்ணாவின் பெயரை அதிமுக என்ற காரணத்தினாலே அவருடைய படத்தோடு, உருவத்தோடு கொடியிலே அமைத்துக்கொண்டு அண்ணாவின் பெயர் விளங்குவதற்காக செய்கின்ற காரணங்களுக்கு குறுக்கீடாக இருக்கிறார் என்றால், இவரை விட வேறு யாராவது அப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுவார்களா என்று எண்ணிப்பார்க்க வேண்டும். அவரைக் கேட்டால் சொல்வார், நான் கண்ணகியையே தூக்கிப் போட்டவர் என்பார். ஏன் கண்ணகியை தூக்கிப் போட்டார் என்று அவருடைய கட்சிக்காரரையே கேட்டேன். கண்ணகியை அந்த அம்மாவுக்கு பிடிக்காது. ஏன் பிடிக்காது என்று கேட்டேன். அவங்களுக்கு சொல்கிற பெருமையெல்லாம் இவங்களுக்கு ஒத்துவராது என்றார்.
நான் ஒரு புத்தகத்தில் படித்தேன். வைதீக கொள்கையின் அடிப்படையில் உள்ளவர்களுக்கு எந்தப் பெண்ணையும் பெருமைப்படுத்தக் கூடாது. ஆரிய கலாச்சாரத்திலே பெண்கள் என்றால் அறிவில்லாதவர்கள். வைதீக கலாச்சாரத்திலே பெண்களை பெருமைப்படுத்தக் கூடாது. அதற்கிடையிலே திராவிட கலாச்சாரம் புகுந்த காரணத்தினால்தான் சில பெண் தெய்வங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய காலம் வந்தது. ஆகவே கண்ணகி திராவிட இனத்தினுடைய சின்னமாக இருந்த காரணத்தால், சேரன் செங்கூட்டுவன் அந்த கண்ணகிக்கு சிலை எடுத்த அந்த காலத்திலேகூட அந்த கண்ணகியினுடைய சிலையை போற்றுவதற்கு வைதீக பிராமணர் தயாராக இல்லை என்ற கருத்து ஒரு ஆராய்ச்சியாளர் எழுதியிருக்கிறார். ஆகவே அப்படி ஒரு நிலை இருந்த காரணத்தினாலே அந்த அம்மையார் கண்ணகி சிலையைக் கூட தூக்கி எறிந்தார். பின்னர் நம்முடைய ஆட்சி வந்தப் பிறகுதான் ஏற்கனவே கண்ணகி சிலை எங்கு இருந்ததோ அங்கு நிலை நிறுத்தினோம்.
அதுபோல தமிழ்நாட்டின் பெருமையை நிலைநாட்டுகிற பொறுப்பையெல்லாம் கலைஞருக்குத்தான். நண்பர்கள் சொன்னார்கள் கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் பலதலைவருக்கு நினைவுச் சின்னங்கள். கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர் சிலை இத்தனையும். கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் இந்த நாடே பெருமைப்பட கூடிய வகையில் தமிழ் மொழி செம்மொழி என்பதை மத்திய அரசை ஏற்க வைத்து, அந்த செம்மொழிக்கான ஆய்வு அரங்கம் சென்னையிலே உருவாக்கி அந்த ஆய்வரங்கம் கலைஞர் ஆட்சியிலே பழைய சட்டமன்ற கட்டிடத்திலே சிறப்பாக நடைபெற்றது.
ஆனால் ஜெயலலிதா புதிய சட்டமன்றம் சிறப்பாக கட்டப்பட்டு பிரதமரால் திறக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளாமல், பழைய சட்டமன்றத்திலே உருவாக்கப்பட்ட செம்மொழிக்கான ஆய்வரங்கத்தை தூக்கி எறிந்தார். அந்த ஆய்வகம் எங்கே போயிற்று தெரியவில்லை. புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பெயராலே ஒரு நூலகம் அமைக்கப்பட்டிருந்தது. அது எங்கே போயிற்று தெரியவில்லை. ஆகவே தமிழை தூக்கி எறிவார். தமிழனை மதிக்க மாட்டார். தமிழ் உணர்வுள்ள அறிஞர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார். தமிழருடைய புத்தாண்டு தை திங்கள் முதல் நாள் என்று தமிழரிஞர்கள் சொன்னால்கூட அவர் ஏற்க மாட்டார். அவர் பஞ்சாங்கத்தைத்தான் ஏற்பார். அப்படிப்பட்ட ஒருவர் தமிழக்கு, தமிழனுக்கு, திராவிடத்துக்கு மாறன ஒருவர் தமிழ்நாட்டிலே முதல் அமைச்சராக இருக்கிறார் என்று சொன்னால் உள்ளபடியே தமிழர்கள் ஏமாந்தவர்களாக அவரை தேர்ந்தெடுத்துவிட்டார்கள். இனி எதிர்காலத்திலாவது அந்த தமிழர்கள் அந்த ஏமாற்றத்திலிருந்து தமிழ்நாட்டை மீட்பதற்கு முற்பட வேண்டும். இவ்வாறு பேசினார்.
No comments:
Post a Comment