மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தா ஆதரவாளர்களால் நடத்தப்படும் அன்னதானத்தில் சாப்பிட வந்த ஒரு முதியவரை வெள்ளை நிற ஜிப்பா அணிந்த நித்தியானந்தாவின் ஆதரவாளர் ஒருவர் படு கொடூரமாக காலால் எட்டி உதைத்தும், கன்னத்தில் பளார் பளார் என இருமுறை அறைந்தும் மிருகத்தைப் போல நடந்து கொண்டசெயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அடாத செயல் தொடர்பான வீடியோ பதிவும் வெளியாகியுள்ளதால் நித்தியானந்தாவுக்கு எதிராக மதுரை ஆதீனம் மீட்புக் குழுவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா ஆதரவாளர்கள் என்ற போர்வையில் கேடிகளும், ரவுடிகளும், குண்டர்களும் குவிந்திருப்பதாக அவ்வப்போது புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளனர். நித்தியானந்தா ஆதரவாளர்களும் யாராவது எதிர்த்துப் பேசினால் அடிப்பது, உதைப்பது என்ற ரீதியில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் அப்பாவி முதியவர் ஒருவரை நித்தியானந்தா ஆதரவாளர் என்று சொல்ல்படும் ஒரு நபர், அடித்து உதைத்து விரட்டிய காட்சி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆதீன மடத்தை நித்தியானந்தா ஆதரவாளர்கள்தான் தற்போது நிர்வகித்து வருகின்றனர். அன்னதானத் திட்டத்தையும் அவர்கள்தான் நடத்தி வருகின்றனர்.
ஜூன் 10ம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில், மதுரை ஆதீன மடத்திற்கு முதியவர்கள் சிலர் சாப்பிட வந்துள்ளனர். சிலர் ஆங்காங்கு அமர்ந்துள்ளனர். ஒரு முதியவர் மட்டும் கையில் தட்டுடன் நின்றபடி காணப்படுகிறார். அவரை வெள்ளை ஜிப்பா போட்ட ஒரு நபர் கன்னத்தில் பளாரென அறைகிறார். பிறகு மீண்டும் அடிக்கிறார். அப்படியும் முதியவர் போகாமல் நின்று கொண்டிருந்ததால் அவரை இடுப்பில் காலை தூக்கி மிகக் கொடூரமாக உதைத்துத் தள்ளுகிறார். இதனால் அந்த முதியவர் தரையில் பரிதாபமாக விழுகிறார்.
இதைப் பார்த்தும் அங்கு இருப்பவர்கள் தலையிடாமல் அமைதி காக்கின்றனர். வாசலில் வாட்ச்மேன் போல உட்கார்ந்திருக்கும் ஒரு நபர் மட்டும் மெதுவாக எழுந்து வந்து அந்த ஜிப்பா மனிதரை அமைதிப்படுத்துவது போல பேச முயற்சிக்கிறார்.
மிகக் கொடூரமான இந்தக் காட்சி பதை பதைக்க வைப்பதாக உள்ளது. வயதானவர்களுக்கும், பெண்களுக்கும் மரியாதை கொடுக்கும் ஊர் மதுரை. ஆனால் அப்படிப்பட்ட ஒரு ஊரில் சாப்பிட முயன்ற ஒரு முதியவரை இப்படி மகா கேவலமாக அடித்துத் தாக்கிய செயல் பார்த்தவர் நெஞ்சை அதிர வைப்பதாக உள்ளது.
இதுகுறித்து நித்தியானந்தாவின் ஆதரவாளராக கூறப்படும் ஞான சொரூபானந்தா என்பவர் கூறுகையில்,
சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் ஒருவர் ஆதீன மடத்திற்கு அன்னதானத்தில் சாப்பிட வந்தார். அவர் மடத்தினுள் வந்து தகாத வார்தைகளால் எல்லோரையும் பேசினார். அந்த இடத்தில் பெண் பக்தர்களும் அதிகமாக இருந்தனர்.
அப்போது ஆதீன மடத்திற்கு சேவை செய்ய வந்த ஒரு நபர் குடிபோதையில் வந்த நபரை வெளியேற்றி உள்ளார். உடனே போலீசாரும் வந்து அந்த நபரை வெளியே கொண்டு சென்றனர். அந்த நபரை வெளியேற்றியவர் ஆதீனமட நிர்வாகி இல்லை என்று விளக்கினார்.
No comments:
Post a Comment