தி.மு.க. செயற்குழு கூட்டம் முடிந்ததும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும்:
கேள்வி: செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஜுலை 4-ந் தேதி சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்திருக்கிறீர்கள். ஜுலை 19-ந் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் சிறைக்கு போய் விட்டால் எப்படி குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியும்?
பதில்: சிறையிலே இருந்தாலும் வாக்களிக்கக்கூடிய அனுமதி அவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும்.
கேள்வி: சிறை நிரப்பும் போராட்டத்தில் எவ்வளவு பேர் பங்கேற்பார்கள்?
பதில்: எண்ணற்றவர்கள்.
கேள்வி: தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு நியாயமற்ற முறையில் கைதுகள் தொடர்ந்து கொண்டே இருப்பதால், மத்திய அரசிடமிருந்து நீங்கள் ஏதாவது ஆட்சி கலைப்பு போன்ற உதவியை எதிர்பார்க்கிறீர்களா?
பதில்: முன்பெல்லாம் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி தமிழகத்திலே இருந்தபோது, இங்கே ஏதாவது பிரச்சினை என்றால், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. போராட்டம் நடத்துகிறபோது, தி.மு.க. ஆட்சியை உடனடியாக கலைத்துவிட வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்பார்கள். நாங்கள் அப்படியெல்லாம் மத்திய அரசை கேட்கமாட்டோம். எங்களுக்கு தெரியும். இது மக்கள் பிரச்சினை. இந்த பிரச்சினையில் ஒரு மாநில அரசை, மத்திய அரசு கலைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்வது முறையல்ல என்பதை நாங்கள் நன்றாக அறிவோம்.
கேள்வி: இந்த போராட்டத்திற்கு தமிழக அரசின் காவல் துறை அனுமதி கிடைக்குமா? அனுமதி கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்?
பதில்: அனுமதி கிடைக்காவிட்டாலும் சிறையை நிரப்புவோம்.
கேள்வி: குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளராக உங்கள் அணியின் சார்பில் நீங்கள் தான் முதன் முதலில் பிரணாப் முகர்ஜியின் பெயரை முன்மொழிந்தீர்கள். அதைப்போல குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக யாரையாவது பரிந்துரை செய்திருக்கிறீர்களா?
பதில்: அந்த பிரச்சினை இப்போது எழவில்லை.
கேள்வி:- தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நேற்றைய தினம் இலங்கை அதிபர் பேசும்போது, கச்சத்தீவில் மீன் பிடிப்பவர்களுக்கு இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டுமென்று பேசியிருக்கிறாரே?
பதில்: சட்டத்தை மீறி யார் நடந்து கொண்டாலும், அந்த அரசு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் வேண்டுமென்றே, தமிழக மீனவர்கள் சட்டத்தை மீறி அங்கே மீன் பிடித்தார்கள் என்று பொய்யாக சொல்லி, அவர்களை தண்டிக்க முனைவதை நாங்கள் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. மத்திய அரசுக்கு அதைப்பற்றி தெரிவிப்போம். தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை பற்றி தி.மு.க. சார்பில் கடிதங்கள் எழுதியிருக்கிறோம். அரசின் சார்பாகவும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன்.
கேள்வி: மத்தியில் பல்வேறு அரசியல் சூழ்நிலைகள் நிலவும் இந்த நேரத்தில் தேசிய அரசியலில் ஒரு பெரிய கூட்டணி மாற்றம் வருமா?
பதில்:- வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கேள்வி: பிரணாப் முகர்ஜிக்கு எப்படிப்பட்ட வரவேற்பு அளிக்கப்படவிருக்கிறது?
பதில்:- 30-ந் தேதி வருகிறார். மாலையில் அவருக்கு வரவேற்பும், விருந்தும் அளிக்கப்படவுள்ளது.
கேள்வி: மத்திய அரசில் தி.மு.க.வுக்கு இரண்டு அமைச்சர்கள் பதவி தரப்பட வேண்டியுள்ளது. தற்போது காலியாக உள்ள நிதி அமைச்சர் பதவி கிடைக்குமா?
பதில்: அதைப்பற்றி எந்த கருத்தும் பரிமாறிக்கொள்ளப்படவில்லை.
கேள்வி: தி.மு.க.வில் ஏராளமான அனுபவம் வாய்ந்த உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். காலியாக உள்ள நிதியமைச்சர் பதவியைக் கேட்டுப்பெறுவீர்களா?
பதில்: காலியாகப்போகிற நிதியை யாராவது கேட்பார்களா?!
இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.
No comments:
Post a Comment