ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரணாப் முகர்ஜி தன்னுடைய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால், அவருக்கு பதிலாக கூடுதலாக நிதியமைச்சர் பொறுப்பையும் பிரதமர் மன்மோகன் சிங் ஏற்க உள்ளார். புகழ்மிக்க பொருளாதார மேதையான மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துள்ள நிலையில் நிதித்துறையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர உள்ளார். எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், நமோ நரைன் ஆகிய இருவர் இணை நிதியமைச்சர்களாக பதவி வகிக்க உள்ளனர்.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான மன்மோகன், 1991-ல் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராக இருந்தபோது பொருளாதார சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது 57.97 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இது நிதியமைச்சர் பொறுப்பை ஏற்க இருக்கும் மன்மோகன் சிங்குக்கு கூடுதல் சவாலாகக் கருதப்படுகிறது. மேலும் அணு சக்தி, விண்வெளி, திட்டமிடல், பணியாளர், மற்றும் ஓய்வூதியம் ஆகிய துறைகள் ஏற்கனவே மன்மோகன் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் வீரபத்ர சிங்குக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதால் நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அவர் வசமிருந்த சிறு,குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் நலத்துறை அமைச்சர் பொறுப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் வசம் ஒப்படைக்கப்பட்டது.
No comments:
Post a Comment