மத்திய அரசு ரயில்வே சேவை வரி விலக்கு அளிக்க மறுத்துவிட்டதால், அடுத்த மாதம் 1ம் தேதி முதல், குளிர்சாதன வசதி மற்றும் முதல் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அனைத்து வகையான ரயில் டிக்கெட்களும் உயர்த்தப்பட்டது. அதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், சாதாரண வகுப்பு ரயில் பெட்டிகளில் பயணிக்க விதிக்கப்பட்ட கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் முதல் வகுப்புகளுக்கான கட்டணம் உயர்வு குறைக்கப்படவில்லை.
இதனால் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் பயணிக்க 20 முதல் 25 சதவீதம் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2009-10ம் ஆண்டு பட்ஜெட்டில் ரயில் பயணிகளின் கட்டணம் மற்றும் சரக்கு ரயில் கட்டணம் ஆகியவற்றிற்கு சேவை வரி விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் மமதா பானர்ஜியின் எதிர்ப்பு காரணமாக, ரயில்வே டிக்கெட் கட்டணத்திற்கான சேவை வரிக்கு மத்திய அரசு விலக்கு அளித்தது.
ஆனால் குடியரசு தலைவர் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு, மமதா பானர்ஜி ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டார். இதனால் மமதா பானர்ஜி, பிரணாப் முகர்ஜி இடையே கசப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 30ம் தேதியுடன் ரயில்களின் முதல் வகுப்பு, குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணத்திற்காக விதிக்கப்பட்ட சேவை வரி விலக்கை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் மேற்கண்ட ரயில் பெட்டிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் 3.6 சதவீத கட்டண உயர்வு அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவை வரி மூலம் ரூ.5 ஆயிரம் கோடி வருமானம் நிதி துறைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.
இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது,
தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள சேவை வரி விலக்கை ரயில்வே துறையினால் ஏற்க முடியாத நிலையில் இருப்பதால், ரயில் கட்டணத்தை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என்றார்
No comments:
Post a Comment