பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரான பிங்கி பிராமனிக் ஆணா அல்லது பெண்ணா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று கொல்கத்தாவில் சோதனை நடத்தப்பட்டபோதும், இது போதாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். வேறு ஒரு சோதனையை நடத்த அவர்கள் கோர்ட்டிடம் கூடுதல் அவகாசம் கோரத் திட்டமிட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவரான பிங்கி பிராமனிக் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடை தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார். இவர் மீது சமீபத்தில் ஒரு பெண் போலீஸில் புகார் கொடுத்தார். அதில், பிங்கி ஒரு ஆண். அவருடன் நான் சில ஆண்டுகளாக பழகி வருகிறேன். பிங்கி என்னைக் கற்பழித்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பண் தனது மனுவில் கூறியிருந்தார்.
இதையடுத்து பிங்கியை போலீஸார் கைது செய்தனர். அவருக்கு பாலினச் சோதனை நடத்த கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று கொல்கத்தாவில் உள்ள அரசு எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு பிங்கி கொண்டு வரப்பட்டார்.
அங்கு அவருக்கு சில சோதனைகள் செய்யப்பட்டன. இருப்பினும் அதில் டாக்டர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. பிங்கியின் பாலினத்தை நிர்ணயிப்பதில் அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது. மேலும் ஒரு சோதனையை நடத்த அவர்கள் தீர்மானித்துள்ளனர். அந்த சோதனைக்கான வசதி அரசு மருத்துவமனையில் இல்லை. இதனால் வேறு எங்காவது அந்த சோதனையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டி.கே.கோஷ் கூறுகையில், எம்ஆர்ஐ, யுஎஸ்ஜி உள்ளிட்ட பல சோதனைகள் பிங்கியிடம் நடத்தப்பட்டன. இருப்பினும் குரோமோசோம் சோதனை நடத்த வேண்டியுள்ளது. அதில்தான் துல்லியமான முடிவை அறிய முடியும். ஆனால் அந்த வசதி இங்கு இல்லை. இதனால் வேறு ஒரு இடத்தில் அதை நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜூன் 29ம் தேதிக்குள் முடிவுகளை அறிவிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இன்னும் ஒரு சோதனை நடத்தப்பட வேண்டியுள்ளதால் கூடுதல் கால அவகாசம் கோரவுள்ளோம் என்றார்.
டாக்டர் பிஸ்வநாத் கஹாலி தலைமையிலான 11 பேர் கொண்ட மருத்துவக் குழு பிங்கிக்கு பாலினச் சோதனைகளை நேற்ஏறு நடத்தியது. மகப்பேறு மருத்துவர் உள்ளிட்டோர் அதில் இடம் பெற்றிருந்தனர்.
No comments:
Post a Comment