சென்னையிலிருந்து கேரள மாநிலம் ஆலப் புழைக்கு நேற்று இரவு ஆலப்புழைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ஈரோடு ரெயில் நிலையம் வந்து மீண்டும் பெருந்துறை, கோவை வழியாக செல்ல புறப்பட்டது. அந்த ரெயிலின் கடைசி பெட்டியில் மாசிப்அலி (வயது 20) என்ற மாற்றுத்திறனாளி வாலிபரும் அவரது தாயார் மயிமோள் (50) மற்றும் பெண்களும் இருந்தனர்.
அந்த பெட்டியின் பாதி பெட்டியில் `பார்சல்' பொருட்கள் இருந்தது. பெருந்துறை அருகே புங்கம்பாடி என்ற இடத்தில் ரெயில் வந்தபோது மாற்றுத்திறனாளி வாலிபர் மாசிப்அலி தனது தாயாரிடம் ``ஏதோ எரியும் வாசனை வருகிறது'' என்று கூறினார். ``அதெல்லாம் ஒன்றும் இருக்காது. பக்கத்தில் பார்சல்கள் இருப்பதால் அதிலிருந்து ஏதோ வாசம் வரும்'' என்று அவரது தாயார் கூறினார்.
அதிகாலை 4.10 மணியளவில் அந்த பெட்டியில் கரும்புகை ஏற்பட்டு தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதை கண்டதும் அந்த பெட்டியில் இருந்தவர்கள் தீ... தீ... என்று அலறினர். அந்த பெட்டியில் வந்த டிக்கெட் பரிசோதகர் பொன்னுசாமி, கார்டு தாமஸ் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு வயர்லஸ் மூலமாக ரெயில் என்ஜின் டிரைவருக்கு தகவல் கொடுத்தனர்.
``கடைசி பெட்டியில் தீ பிடித்து எரிகிறது உடனடியாக ரெயிலை நிறுத்துங்கள்'' என்று கூறினார்கள். இதனால் என்ஜின் டிரைவர் கோபாலகிருஷ்ணன், உதவி டிரைவர் விஷ்ணு ஆகியோர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்கள். இதை தொடர்ந்து தீ பிடித்த கடைசி பெட்டியில் இருந்த பயணிகள் வேகமாக கீழே இறங்கினர்.
மேலும் மற்ற பெட்டிகளில் இருந்தும் பயணிகள் அலறியடித்தப்படி கீழே குதித்தனர். இதனால் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கோட்ட தீயணைப்பு அதிகாரி மதியழகன் உத்தரவின் பேரில் ஈரோடு, பெருந்துறை, பவானி, மொடக்குறிச்சி ஆகிய பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
ரெயில் பெட்டியில் பிடித்து எரியும் தீயை கடுமையாக போராடி அணைத்தனர். எனினும் அந்த பெட்டி முழுவதும் தீயில் எரிந்து விட்டது. அந்த பெட்டியில் இருந்த கம்ப்யூட்டர்கள், லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள், ஆட்டோ மொபைல்ஸ் பொருட்கள் மற்றும் மின்சாதனப் பொருட்கள் யாவும் தீயில் எரிந்து சாம்பலாகி விட்டன.
இவற்றின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி சுஜாதா ஜெயராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், பெருந்துறை போலீசாரும் விரைந்து சென்று தீ தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
உடனடியாக ரெயிலை நிறுத்தி பெட்டியில் இருந்தவர்கள் இறங்கியதால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தால் மற்ற ரெயில்கள் நிறுத்தப்பட்டன. 4 மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிறகு ரெயில்வே உயர் அதிகாரிகளின் முயற்சியால் 4 மணி நேரத்துக்கு பிறகு அந்த ரெயில்கள் வேறு டிரக்கில் (மாற்றுப்பாதையில்) விடப்பட்டது.
ரெயில் பெட்டியின் அடியில் உள்ள பேட்டரி சூடாகி தீ பிடித்ததாக கூறப்படுகிறது. எனினும் உண்மையான காரணம் என்ன? என்று ரெயில்வே அதிகாரிகளும், ரெயில்வே போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4 மணி நேரம் தாமதத்துக்கு பிறகு எரிந்த ரெயில் பெட்டி கழட்டப்பட்டு அதற்கு பதிலாக ஈரோட்டில் இருந்து மாற்று ரெயில் பெட்டி கொண்டு வரப்பட்டு அதில் இணைக்கப்பட்டது. அந்த பெட்டியில் பயணிகள் ஏற்றப்பட்டு ரெயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.
No comments:
Post a Comment