திசையன்விளை பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு வித்தியாசமான முறையில் டார்ச்சர் கொடுத்து வருகிறார். இதனால் அவர் மீது மாவட்ட கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் குமுறலில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் எல்.கே.ஜி. முதல் பிளஸ் டூ வரை உள்ள ஒரு தனியார் பள்ளியி்ல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 9ம் வகுப்பு அறிவியல் பாட ஆசிரியர் ஒருவர் மாணவ, மாணவிகளுக்கு நூதன முறையில் தண்டனை என்ற பெயரில் டார்ச்சர் கொடுத்து வருகிறார். இதனால் பெற்றோர்கள் கொதிப்பு அடைந்துள்ளனர்.
கடந்த வாரம் வகுப்பறையில் பேசிக் கொண்டிருந்த மாணவர் மீது அந்த ஆசிரியர் புத்தகத்தை தூக்கி எறிந்தார். இதில் அந்த மாணவரின் கண்ணாடி உடைந்து முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. மாணவி ஒருவர் வீட்டுப் பாடம் எழுதாமல் வகுப்பறைக்கு வந்துள்ளார். இதையறிந்த ஆசிரியர் அந்த மாணவியை அழைத்து கண்டித்ததுடன் அவரை நிற்க வைத்து கால் மேல் ஏறி தனது காலால் மிதித்து அழுத்தியுள்ளார். வலி பொறுக்க முடியாத அந்த மாணவி அலறியபோதும் சுமார் 20 நிமிடம் தனது காலால் மிதித்து அவரின் பாதங்களை அழுத்தியுள்ளார்.
இது குறித்து அந்த மாணவி வீட்டிற்கு சென்றதும் தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் நேற்று பள்ளி்க்கு வந்து நிர்வாகத்திடம் முறையிட்டனர். அவர்கள் ஆசிரியரை கண்டிப்பதாக கூறியுள்ளனர். ஆனால் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோல் மாணவர்களையும் நிற்க வைத்து அவர்களின் பாதங்களில் ஏறி நிற்கும் ஆசிரியர் சில சமயங்களில் அவர்களை பின் பக்கமாக திடீரென்று தள்ளி விடுவார் என்றும் கூறப்படுகிறது. இதனால் அந்த ஆசிரியர் மீது பெற்றோர் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர் மீது மாவட்ட கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment