1990ஆம் ஆண்டு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங் விரைவில் விடுதலை செய்யப்பட இருக்கிறார் என்று பாகிஸ்தானின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தன்னை விடுதலை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்ட சரப்ஜித் சிங்கின் கருணை மனு ஏற்கப்பட்டு, அவரை விடுதலை செய்வதற்கான உத்தரவை பாகிஸ்தான் சட்டத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. அதுகுறித்த உத்தரவை அந்நாட்டின் உள்துறை அமைசகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 22 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் இருக்கும் சரப்ஜித் சிங் விரைவில் விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1990ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங் 5 முறை பாகிஸ்தான் அதிபருக்கு கருணை மனு அனுப்பியிருந்தார்.
49 வயதாகும் சரப்ஜித் சிங் தற்போது லாகூரில் உள்ள கோட்லக்பட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளர். சுமார் 22 ஆண்டுகளாக அவர் சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1990ஆம் ஆண்டு பஞ்சாப் மாகாண 4 குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பிருப்பதாக சேர்க்கப்பட்டவர் மஞ்ஜித் சிங். தவறுதலாக சரப்ஜித் சிங்கை பாகிஸ்தான் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்தக் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தபோது சரப்ஜித் சிங் இந்தியாவில் இருந்ததற்கான தகுந்த ஆவண பூர்வ ஆதாரங்கள் இருப்பதாக சரப்ஜித் சிங் வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
2008ஆம் ஆண்டிலேயே சரப்ஜித் சிங் மரண தண்டனை பெற்றிருப்பார். ஆனால் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் தலையீட்டால் அது நிறுத்தி வைக்கப்பட்டது. சரப்ஜித் பாகிஸ்தான் எல்லையருகே குடிபோதையில் அலைந்ததையடுத்து அவரை மஞ்ஜீத் சிங் என்று நினைத்து பாகிஸ்தான் கைது செய்ததாக அவரது குடும்பத்தினர் கூறியிருந்தனர்.
No comments:
Post a Comment