நடிகை வனிதா தொடர்ந்த வழக்கில், அவரது பெற்றோரான நடிகர் விஜயகுமார், நடிகை மஞ்சுளா ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நடிகர் விஜயகுமார் - அவர் மகள் வனிதாவுக்கிடையே எழுந்துள்ள மோதலில், வனிதா கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்காத போலீசார், விஜயகுமார் கொடுத்த புகார் மீது மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வனிதாவின் கணவரை கைது செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து வனிதா தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளைச் சந்தித்து வற்புறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகுமார், மஞ்சுளா முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், "விஜயகுமார் வீட்டில் 7.11.2010 அன்று நடிகை வனிதா தனது மகனை அடித்தபோது மஞ்சுளா அதில் தலையிட்டு தடுத்தார். இதனால் கோபம் கொண்ட வனிதா தனது தாய் என்றும் பாராமல் மஞ்சுளாவை தாக்கினார். இதனால் அந்த பிரச்சினையில் விஜயகுமார் தலையிட்டார்.
அப்போது ஆனந்தராஜன் (வனிதாவின் கணவர்) ஓடிவந்து விஜயகுமார் கையைப்பிடித்து தாக்கினார். இதனால் அவர் கீழே விழுந்து கையில் படுகாயம் ஏற்பட்டது. காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் விஜயகுமார் சேர்ந்தார்.
குடும்ப உறுப்பினர்களுக்குள் நடந்த தகராறுதானே என்று விட்டுவிட்டோம். ஆனால் வனிதா எங்கள் மீது வழக்கு தொடர்ந்தார். ஆரம்பத்தில் ஜாமீனில் வரக்கூடிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த மதுரவாயல் போலீசார் பின்னர் பெண் கொடுமை தடுப்புச் சட்டத்தையும் வழக்கில் சேர்த்து ஜாமீனில் வெளிவர முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டனர்.
மேலும் பத்திரிகை, டி.வி.களுக்கு பேட்டி அளித்து எங்களை மிகவும் தலைகுனிய வைத்துவிட்டார். எனவே 7.11.2010 அன்று நடந்த சம்பவத்தை பற்றி போலீசிடம் சொல்ல வேண்டிய அவசியமாகிவிட்டது. அதைத் தொடர்ந்து வனிதா மற்றும் ஆனந்தராஜன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆனந்தராஜன் கைது செய்யப்பட்டார்.
இதனால் எங்களை வனிதா எதிரியாக நினைத்து செயல்பட்டு வருகிறார். எங்கள் குடும்பப் பிரச்சினையில் பத்திரிகைகளும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தன. எனவே வனிதா விவகாரத்தில் பின்னால் இருந்து இயங்கும் சக்தி பற்றி இப்போதுதான் தெரியவந்தது.
அந்த நிர்ப்பந்தத்தை தாங்க முடியாமல் எங்கள் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத சட்டப் பிரிவுகளை உரிய விசாரணை இல்லாமல் போலீசார் புகுத்திவிட்டனர்.
எங்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது. உயர் ரத்த அழுத்தத்தில் இருப்பவர்கள் நாங்கள். மேலும் அருண் விஜய் மீதும், எங்கள் மீதும் மற்றொரு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
அந்த சம்பவம் முழுக்க முழுக்க உணர்ச்சிப் பெருக்கால் ஏற்பட்டதாகும். ஆனால் பத்திரிகைகள் அதை பெரிதாக்கிவிட்டன. நாங்கள் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள். எங்களை தவறுதலாக வழக்கில் சேர்த்துள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டால் சமுதாயத்தில் எங்களுக்கு இருக்கும் மரியாதை, நற்பெயர் கெட்டுவிடும். எனவே எங்களுக்கு முன்ஜாமீன் தந்து உத்தரவிட வேண்டும்..." என்று கூறியுள்ளார்.
வனிதா கடும் எதிர்ப்பு:
இந்த மனு நீதிபதி அருணா ஜெகதீசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வனிதா தரப்பில் வக்கீல் வாதிட்டார். தன்னையும் வழக்கில் இணைத்து விசாரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை 13-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
வன்கொடுமை சட்டம் என்ன?
அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்குத் தொல்லை கொடுத்தல்,மாநகர பஸ்களில் பயணிக்கும் பெண்களிடம் வம்பு செய்தல், குடும்பத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் வரதட்சணை கொடுமை போன்ற சம்பவங்களில் இந்தச் சட்டம் பாய்கிறது. சம்பவங்களின் போது பெண்களுக்கு சிறிய காயம் ஏற்பட்டால் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை உண்டு.அதிக பட்சம் நான்காண்டுகள் தண்டனை கொடுக்கப்படலாம்.பாதிக்கப்பட்ட பெண் இறந்துவிட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை நிச்சயம்.
.
No comments:
Post a Comment