லண்டனில் உள்ள புகழ்பெற்ற மேடம் டுஸாட்ஸ் (Madame Tussauds) மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெழுகுச் சிலையை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவிலிருந்து ஏற்கெனவே அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு லண்டன் மியூசியத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த மியூசியத்தில் ரஜினியின் மெழுகுச் சிலை இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
குறிப்பாக ரஜினியின் சிவாஜி படம் உலகளவில் பிரபலமடைந்து சக்கைப் போடு போட்டபோது, 'பெட்டிஷன் ஆன்லைன்' போன்ற பிரபல இணையதளங்கள் மூலம் ரசிகர்களும் பிரபலங்களும் இந்தக் கோரிக்கையை வைத்தனர்.
சென்னையிலிருந்து இயங்கும் ரஜினி ரசிகர்களின் இணையதளங்கள் மூலம் முதல்முறையாக இந்தக் கோரிக்கை 2008-ல் வைக்கப்பட்டது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த மனுவை ஆதரித்து மேடம் டுஸாடுக்கு மின்னஞ்சல்களை அனுப்பினர்.
இப்போது மேலும் சில முன்னணி செய்தி இணையதளங்கள் ரஜினிக்கு மெழுகுச் சிலை வைக்கக் கோரி கட்டுரைகள் வெளியிட்டும், வாசகர் கருத்துக்கணிப்பை நடத்தியும் வருகின்றன.
இணையதளங்கள், மின்னஞ்சல்கள் மூலம் குவியும் கோரிக்கைகளை அடுத்து, இதனைப் பரிசீலித்து ரஜினிக்கு மெழுகுச்சிலை அமைக்க மேடம் டுஸ்ஸாட்ஸ் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் கூறுகையில், "ரஜினி சாருக்கு மெழுகுச் சிலை வைப்பதன் மூலம் அந்த மியூசியத்துக்குதான் பெருமை. ரஜினி சார் சிலை அங்கே வைக்கப்பட்ட பிறகு பாருங்கள்... வழக்கமாக வரும் கூட்டத்தை விட இருமடங்கு கூட்டம் வரும். அப்புறம்தான் அவர்களுக்கே தெரியும்... நாம் ரொம்ப லேட் பண்ணிட்டோமே.. உலகளாவிய ஒரு சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிதான்" என்றார்.
இயக்குநர் எஸ்பி முத்துராமன் கூறுகையில், "ரஜினி சாருக்கு மெழுகுச் சிலை வைப்பதற்கு இது பொருத்தமான நேரம்தான். அவரைப் போன்ற சிறந்த மனிதர் - கலைஞர் எவருமில்லை..." என்றார்.
No comments:
Post a Comment