முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜாவுக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் நேற்றுநடந்த அதிரடி சிபிஐ சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை முதல் இரவு வரை டெல்லி, சென்னை, பெரம்பலூர், திருச்சி, அரியலூர் ஆகிய இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் மொத்தம் 34 இடங்களில் ரெய்டு நடத்தினர்.
டெல்லியில் நீரா ராடியா, முன்னாள் டிராய் அமைப்பின் தலைவர் பிரதீப் பைஜால், ஹவாலா புரோக்கர் மகேஷ் ஜெயின், அவரது சகோதரர்கள் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களில் ரெய்டு நடந்தது.
தமிழகத்தில் பெரம்பலூர் அருகே வேலூர் கிராமத்தில் உள்ள ராஜாவின் வீடு, நண்பர் சாதிக்பாட்சாவின் பங்குதாரர் சுப்புடு என்கிற சுப்ரமணியன் வீடு ஆகியைவை சோதனைக்குள்ளாகின.
ராஜாவின் சகோதரர் கலியபெருமாள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். வங்கிக் கணக்கும் ஆராயப்பட்டது. கலியபெருமாள் நடத்தி வரும் டிரேடிங் ஏஜென்சியிலும் சோதனை நடந்தது.
திருச்சி அருகே திருவானைக்காவில் ராஜாவின் சகோதரி சரோஜாவின் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
ராஜாவின் சகோதரர் ஆ.ராமச்சந்திரன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவநிலை மாற்றம் மற்றும் தகவலமைப்பு மையத்தின் இயக்குநராக உள்ளார். திருச்சி அருகே சிவராமன் நகரில் அவருடைய வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நக்கீரன் பத்திரிக்கை இணை ஆசிரியர் காமராஜ் வீட்டிலும் சோதனை நடந்தது.
நேற்றைய சோதனையில் அதிக விசாரணைக்குள்ளானவர் ஜெகத் கஸ்பார். இவர் தமிழ் மையம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் சங்கமம் என்ற நிகழ்ச்சியை கனிமொழியுடன் இணைந்து நடத்தி வருகிறார். இவரது வீடு மட்டுமல்லாமல் அலுவலகமும் சோதனைக்குள்ளானது. இவரது வீடு, அலுவலகத்தில் நேற்று இரவு வரை தீவிர சோதனையும், கஸ்பாரிடம் தீவிர விசாரணையும் நடத்தப்பட்டது.
தமிழ் மையம் அமைப்பின் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கனிமொழி இந்த அமைப்பின் இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். சோதனைக்குப் பிறகு ஜெகத் கஸ்பரை அதிகாரிகள் தனி இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
ராஜாவின் முன்னாள் உதவியாளர் அகிலன் ராமநாதன் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
நேற்று நடந்த விசாரணை மற்றும் சோதனைக்குப் பின்னர் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இதனால் ராஜா மீது விரைவில் நடவடிக்கை எடுத்து கைது செய்யப்படலாம் என்பதால் திமுக தலைவர் கலைஞரும், மற்ற திமுக தலைவர்களும் கலக்கத்திலும் பதற்றத்திலும் உள்ளனர்.
நேற்று சிபிஐ மட்டுமல்லாமல் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் சோதனையில் கலந்து கொண்டதால் நாடே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
ஆரம்பம் ஓகே முடிவு எப்பவும்போலய
ReplyDelete