தமிழக பயணத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங் மீது தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இலங்கையில், ராணுவத்துக்கும் புலிகளுக்கும் நடந்த சண்டை, கடந்த ஆண்டு ஓய்ந்தது. புலித் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதால், அந்த இயக்கம் வலுவிழந்து விட்டது.இந்த அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பல், தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாகவும், உஷார் நடவடிக்கைகளை எடுக்குமாறும் மத்திய உளவுத்துறை மூலம், தமிழக காவல் துறைக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டது. இது தொடர்பாக மத்திய உளவுத்துறையிடம் மேலும் சில விளக்கங்களை மாநில காவல் துறை கேட்டது.இதைத் தொடர்ந்து சென்னையில் நேற்று மாலை காவல் துறை உயர் அதிகாரிகள், மத்திய உளவுத்துறையினர் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில், எத்தகைய திட்டத்துடன், எவ்வாறு அவர்கள் ஊடுருவியுள்ளனர் என்ற விவரங்களை மத்திய உளவுத்துறை விவரித்ததாகக் கூறப்படுகிறது.பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சிதம்பரம், தமிழக முதல்வர் கருணாநிதியை குறி வைத்து இந்த கும்பல் ஊடுருவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங், வரும் 3ம் தேதி சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள நிலையில், இந்த எச்சரிக்கை, காவல் துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, முதல்வருக்கான பாதுகாப்பு நேற்றிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில், சந்தேகப்படும் படியாக யாரும் நடமாடுகிறார்களா எனவும், பல ஆண்டுகளாக இருப்போரில் சந்தேகப்படும் வகையில் செயல்பட்டவர்கள் யார் யார் என கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் மீதும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதால் சென்னை மற்றும் சிவகங்கையில் உள்ள அவரது வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment