Saturday, December 18, 2010
இந்தியத் தலைவர்களைக் கொல்லத் திட்டமா... புலிகளின் மறுப்பும்!
கருணாநிதி, மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்ட இந்திய தலைவர்களுக்கு தங்களால் அச்சுறுத்தல் உள்ளதாக இந்திய உளவுத் துறை கூறியுள்ளதை(உளவுத்துறை கூறிய அந்த செய்தியை படிக்க இங்கு செலவும் ) வன்மையாகக் கண்டித்துள்ளது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். அதுபோன்ற திட்டம் ஏதும் தம்மிடமில்லை என்றும் அந்த இயக்கம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இணைப்பாளர் இராமு.சுபன் இன்று வெளியிட்ட அறிக்கை:
"இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி ஆகியோரை தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லத் திட்டமிட்டுள்ளார்கள் என இந்திய புலனாய்வுத் துறையினரால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக வரும் செய்திகளை முற்றாக மறுப்பதுடன் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
சிங்களப் பேரினவாத அரசு தமிழர் மீது கட்டவிழ்த்து விட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளைக் கண்டித்து மனிதநேயமுள்ள நாடுகளும் அமைப்புக்களும் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளன. இக்காலப்பகுதியில் எமது போராட்டத்தின் நியாயத்தை மழுங்கடிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் பொய்ப் பரப்புரையின் ஒருபகுதியாகவே இச்செய்தியை நாம் பார்க்கின்றோம்.
கடந்த ஆண்டு மே மாதம் 17 ஆம் நாளன்று ஆயுதங்களை மெளனிப்பதாக நாம் வெளிப்படையாக அறிவித்திருந்தோம்.
ஜனநாயக வழியிலான மக்கள் எழுச்சியின் பலனாக எமது போராட்டத்துக்கு அனைத்துலக ரீதியில் எழுந்துவரும் ஆதரவையும் தமிழ் மக்களது அரசியல் - ராஜதந்திர நகர்வுகளையும் தகர்த்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுத வழியில் மட்டுமே நாட்டங்கொண்டது என்பதைக் காட்டுவதற்கு இலங்கை அரசு பல சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்பதை நாம் நன்கு அறிவோம்.
இத் தீய எண்ணங்கொண்ட சிங்கள அரசின் அணுகுமுறைக்குத் துணை போகாமலும் அவர்களின் சதிவலைக்குள் வீழ்ந்துவிடாமலும் இருக்க வேண்டுமென்று இந்திய, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களையும் மக்களையும் அன்போடு வேண்டி நிற்கின்றோம்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.."
-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Labels:
செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment