இலங்கை அரசியல் விவகாரம் தொடர்பில் விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ள ஆவணங்கள் கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளதாக தெரிய வருகின்றது.
இலங்கை அரசியல் விவகாரம் தொடர்பில் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் கொழும்புக்கும், வொஷிங்டனுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு முறுகல் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது
இந் நிலையில், இந்த முறுகல் நிலை மேலும் மோசமடைவது தற்போதைய நிலையில் தமக்குச் சாதகமாக அமையாது என்பதால் இவ் விவகாரம் குறித்து நிதானமான காய் நகர்த்தல்களை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் இலங்கை அரசியல் விவகாரம் தொடர்பில் நான்கு வகையான தகவல்கள் உள்ளடங்கியிருந்தன.
வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான அமெரிக்காவின் அபிப்பிராயங்கள் இத் தகவல்களில் வெளியாகியிருந்தன.
இரண்டாவதாக, சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றிசீயா புட்டர்னீஸூடன் தமிழ் அரசியல் தலைவர்கள் நடத்திய பேச்சுக்கள் தொடர்பாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
மூன்றாவதாக, பாகிஸ்தானைப் பிரதான தளமாகக் கொண்டியங்கும் லஸ்கர் ஈ தொய்பா அமைப்பின் பயிற்சி முகாம்கள் இலங்கையில் செயற்பட்டு வருவதாக அமெரிக்கத் தூதுவர் அனுப்பி வைத்த தகவல்களும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் வெளியாகி இருந்தன.
அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது 2009ஆம் ஆண்டின் முற்பகுதியில் சிறிலங்கா அரசாங்கம் வடகொரியாவிடம் இருந்து பெருமளவு ரொக்கட் லோஞ்சர்களை கொள்வனவு செய்தது என்ற தகவலும் இந்த ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இந் நான்கு தகவல்களும் சர்வதேச சமூகத்திடம் இருந்து சிறிலங்கா அரசாங்கத்தை தனிமைப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை மேலும் அதிகரித்துள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இனிவரும் காலங்களில் இலங்கை விவகாரம் தொடர்பில் விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிடவுள்ள ஆவணங்கள் மேலும் அதிர்ச்சிகரமான தகவல்களைக் கொண்டிருக்கலாம் என இராஜதந்திர வட்டாரங்கள் எதிர்ப்பார்ப்பதாகவும் இவ் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவராக இருந்த ரொபர்ட் பிளேக் இலங்கை விவகாரம் தொடர்பில் பல சர்ச்சைக்குரிய விடயங்களைக் கையாண்டவர். இந் நிலையில், அவரது காலத்தில் அனுப்பி வைக்கப்பட்ட தகவல்கள் இன்னும் சர்ச்சைக்குரியதாக இருக்கும் என இராஜதந்திர வட்டாரங்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, சர்வதேச சமூகத்தால் ஒதுக்கப்பட்ட வடகொரியாவிடம் இருந்து சிறிலங்கா அரசாங்கம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்தது என்ற விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல் அந் நாட்டின் மீது சர்வதேச சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அதனால் தான் இவ் விடயம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக மறுப்புத் தெரிவித்ததாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத் தகவல்களை வெளியிட்டதின் மூலம் சிறிலங்காவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு நெருக்கடி நிலையை விக்கிலீக்ஸ் இணையத்தளம் ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையத்தளம் வசம் இருக்கின்ற 251,287 அமெரிக்க இராஜதந்திர இரகசிய ஆவணங்களில் மூவாயிரத்துக்கும் அதிகமான ஆவணங்கள் இலங்கை அரசியல் விவகாரங்களுடன் தொடர்புடையவை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந் நிலையில், விக்கலீக்ஸ் வெளியிட்டுள்ள இத் தகவல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிபலிப்பை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் உன்னிப்பாக கவனித்து வருகின்றது.
இந்த ஆவணங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸின் செயலைக் கண்டித்து கொழும்பைச் சாந்தப்படுத்த முயன்ற அமெரிக்கத் தூதரகம் இத் தகவல்களை மறுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
அதேவேளை, வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களும், மேற்கத்தைய நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.இத்தகையதொரு நிலையில், இதந்த இராஜதந்திர உறவுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை மிகவும் நிதானமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டிலேயே சிறிலங்கா அரசாங்கம் இருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .
No comments:
Post a Comment