ஐநா நிபுணர் குழுவுக்கு தமிழர்களின் பெயர்களில் தவறான தகவல்களை இலங்கை அரசு அனுப்பியது தற்போது அம்பலமாகியுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட ஐநா நிபுணர் குழுவுக்கு தமிழர்களின் பெயர்களில் ஏராளமான மின்னஞ்சல்களையும் பதிவுத் தபால்களையும் இலங்கை அரசே போலியாக அனுப்பியதாகவும் அவற்றில் தமக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்துள்ளதாகவும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.ஆனால், மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட அத்தகைய தகவல்கள் ஒரே கணினியில் (ஐபி எண்) இருந்து அனுப்பப்பட்டது என்ற விவரம் கண்டுபிடிக்கப்பட்டதால் அவற்றை ஐநா நிராகரித்துள்ளதாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அந்த ஐபி எண் இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான கணினியில் இருந்து அனுப்பப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் இலங்கையில் போர்க் குற்றங்களை விசாரிக்க, ஐ.நா.,வால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, தன் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான தேதி, இந்தாண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் நடந்த போரின் போது நிகழ்ந்த போர்க் குற்றங்கள் எனப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க, ஐ.நா., மூவர் குழுவை நியமித்தது. ஆரம்பத்தில் இக்குழுவை எதிர்த்த இலங்கை, சமீபத்தில், குழு இலங்கை வரும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படுவதாகக் கூறியிருந்தது. இதையடுத்து, இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் பற்றிய தன் அறிக்கையை, நிபுணர் குழு சமர்ப்பிப்பதற்கான தேதி இந்தாண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூனின் துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹன் ஹக், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிபுணர் குழு தன் அறிக்கையை டிச., 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று முன்பு தேதி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்தத் தேதி இந்தாண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிபுணர் குழு தன் கடமையை எவ்வளவு விரைவில் நிறைவேற்ற முடியுமோ அவ்வளவிற்கு அதற்கு ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு ஹக் தெரிவித்தார்.
No comments:
Post a Comment