இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஏராளமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக இந்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. தப்பிச் சென்றவர்கள் பெருந்தொகையான ஆயுதங்களையும் தம்முடன் எடுத்துச் சென்றதாகவும் அக்கால கட்டத்தில் புலிகளுக்கு ஆயுதம் விநியோகித்த தாவூத் இப்ராஹிம் குழுவினர் இந்தியப் புலனாய்வு விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
தாவூத் இப்ராஹிம் குழுவின் முக்கிய புள்ளியான மிர்ஸா பெய்க் இடம் நடாத்தப்பட்ட விசாரணைகளிலிருந்தே மேற்படி தகவல்கள் வெளிவந்துள்ளன.
அது மாத்திரமன்றி யுத்தம் நிறைவுற்ற பின்னரும் கூட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்து விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியிருப்பதாகவும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மிர்சா பெக்கிடமிருந்து பொட்டம்மான் பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொள்வது தொடர்பான விசாரணைகளை இந்தியப் புலனாய்வுத்துறை மேற்கொண்டுள்ள போதிலும், அவற்றின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
அதுமட்டுமன்றி தற்போதும் கூட கொழும்பில் இருந்து செயற்படும் தாவூத் இப்ராஹிம் கோஷ்டியின் முக்கியஸ்தர் ஒருவர் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் புலனாய்வு அமைப்பினரிடம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் வலையமைப்பு தொடர்பாக அவர் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ள போதிலும், பாதுகாப்புக் கருதி அவற்றை வெளியிட முடியாதுள்ளதாக மும்பைப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment