சூப்பர் ஸ்டார்ஸ்-கோலிவுட்டின் கிரிக்கெட் டீம்-ரஜினி முன்னிலையில் கிரிக்கெட் ஆட்டம்
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி நட்சத்திரங்கள் பங்கேற்றும் மெகா கிரிக்கெட் போட்டி, சூப்பர் ஸ்டார் ரஜினி முன்னிலையில் வரும் ஐனவரி மாதம் நடக்கிறது.
பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் கிரிக்கெட் விளையாட்டில் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர்.
இவர்களின் திறமையை வெளிக்கொணரும் விதமாகவும், திரை நட்சத்திரங்கள் கிரிக்கெட் விளையாடினால் அதற்கு ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பு மற்றும் வருவாயை நல்ல காரியத்துக்கு பயன்படுத்தும் நோக்கிலும் பிரபலங்களின் கிரிக்கெட் அமைப்பு ஒன்றை செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) என்ற பெயரில் தொடங்கியுள்ளனர்.
இந்த அமைப்பின் அறிமுக விழா நேற்று சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்தது.
கிரிக்கெட் அமைப்பு அறிமுகப்படுத்தி நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியதாவது:
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழி பட கலைஞர்களும் பங்கேற்கும் செல¤ப்ரிட்டி கிரிக்கெட் லீக் (சிசிஎல்) போட்டி வரும் ஜனவரி மாதம் 22, 23, 29, 30 ஆகிய 4 நாட்கள் நடக்க உள்ளது. இதற்காக தமிழ் நடிகர்களைக் கொண்ட அணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த டீமின் ஐகான் வீரராக சூர்யா இருப்பார்கள். விஜய்யுடன் பேச்சு நடந்து வருகிறது. அவர் ஒப்புக் கொண்டதும் அறிவிப்போம்.
இவர்களைத் தவிர ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, கார்த்தி, ஷாம், அப்பாஸ், ஜெய், அம்சவர்தன், ரமணா, விக்ராந்த், ஜீவா, ஆர்யா, மாதவன், சாந்தனு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இதில் பங்கேற்கின்றனர். நானும் பங்கேற்கிறேன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அழைத்தோம். அவரும் வருவதாகவும், அணியை உற்சாகப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். அவர் முன்னிலையில் இந்தப் போட்டியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
தெலுங்கு டீமில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, என்.டி.பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர்., இந்தி டீமில் சல்மான் கான், சுனில் ஷெட்டி அணி, கன்னடத்தில் சுதீப், புனித் ராஜ்குமார் அணி பங்கேற்கின்றன. இது பொழுதுபோக்காக இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட் விதிகளின்படி தொழில்முறையிலான ஆட்டமாக இருக்கும். ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் இப்போட்டிகள் நடக்கும். சென்னையில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படுவதால், இங்கு ஆட்டம் நடத்துவது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும். போட்டிக்கென பிரத்யேக கோப்பை, ஒவ்வொரு அணிக்கும் வெவ்வேறு கலரில் ஆடை ஆகியவை தயாராகிறது. ராடன் மீடியா, ஸ்பிரின்ட் அண்ட் ரிதம் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றன.
ஜெயிக்கும் அணிக்கு ரூ 25 லட்சம் பரிசு அளிக்கப்படும். இந்தத் தொகை நல்ல காரியங்களுக்கு செலவிடப்படும், என்றார் சரத்குமார்.
அணியின் பெயர் என்ன?
அணியின் பெயர் என்ன என்ற கேள்விக்கு, இந்த சிசிஎல்லின் இயக்குநர்களில் ஒருவரான ராதிகா சரத்குமார் கூறியது:
"மும்பை அணிக்கு மும்பை ஹீரோஸ் என்று வைத்துள்ளனர். கன்னட அணிக்க கன்னட ராயல்ஸ் என்று வைத்துள்ளனர். தெலுங்கு அணிக்கு தெலுங்கு டைகர்ஸ் என்று வைத்துள்ளனர். தமிழ் டைகர்ஸ் என்று நாம் வைக்க முடியாது. விட மாட்டார்கள். அதனால், நம் எல்லோருக்கும் பிடித்த, ஒரே ஸ்டார்... சூப்பர் ஸ்டார் பெயரில் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் என்று வைத்துள்ளோம்", என்றார்.
ரஜினி இந்த போட்டிகளில் பங்கேற்பாரா? என்று கேட்டபோது, "ரஜினி சார்கிட்ட இந்த விஷயம் குறித்துப் பேசியதும் உற்சாகமாக எங்களை வாழ்த்தினார். அப்போது, 'நான் வந்து கிரிக்கெட் ஆடறது சரியா வராது. எந்த குறிப்பிட்ட அணிக்காகவும் ஆட முடியாது (காரணம் எல்லா மொழியிலும் அவருக்கு ஆதரவு உள்ளது!). வேண்டுமானால் நான் வந்து அனைவரையும் உற்சாகப்படுத்துகிறேன். வீரர்களுக்கு கூல்டிரிங்கஸ் கொடுக்கச் சொன்னா கூட ஓகேதான்... நான் வர்றேன் கவலைப்படாதீங்க", என்றார் தமாஷாக. எப்படியோ நீங்கள் வந்தா போதும் என்று கூறியுள்ளோம்," என்றார்.
போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ராதிகாவின் ராடான் டெலிவிஷன் பெற்றுள்ளது.
20 ஓவர்கள் கொண்ட அனைத்துப் போட்டிகளையும் ராதிகாவின் ராடான் மீடியா மற்றும் சீனிவாசலு மூர்த்தி, திருமால்ரெட்டி, விஷ்ணுவர்த்தன், இந்தூரி ஆகியோர் நடத்துகின்றனர்.
சிசிஎல் அமைப்பின் அணிகளுக்கென பிராண்ட் அம்பாஸடர், சியர் லீடர் என இன்னும் பல கவர்ச்சிகரமான அம்சங்களை அறிவிக்கவிருக்கிறார்களாம்.
No comments:
Post a Comment