சென்னை விமான நிலையத்தில் அண்ணன் அழகிரியை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்த்த கனிமொழி எம்பி, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வழக்கு மேல் வழக்காகப் போட்டுக் கொண்டிருக்கும் சுப்பிரமணியசாமியிடம் நலம் விசாரித்துவிட்டுப் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செவ்வாய்க்கிழமை காலை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா டெல்லி செல்வார் என்று கூறப்பட்டதால், செய்தியாளர்கள் விமான நிலையத்தில் குவிந்துவிட்டனர்.
ஆனால் அங்கு அவர்கள் பார்த்ததோ கனிமொழி எம்பியை. யாரிடமும் எதுவும் கூறாமல் விறுவிறுவென விவிஐபிக்கள் வரவேற்பறைக்குப் போன கனிமொழியை எதிர்கொண்ட திமுகவினர், உள்ளே மத்திய அமைச்சர் முக அழகிரி அமர்ந்திருப்பதாகச் சொல்ல, உடனே நின்றுவிட்ட கனிமொழி, அடுத்த அறைக்குச் சென்றுவிட்டாராம்.
ஆனால் அந்த நேரம் பார்த்து அவர் எதிரில் ஜனதா கட்சித் தலைவரும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்தடுத்து புதிய வழக்குகள் போட்டு தலைவலி கொடுத்து வருபவருமான சுப்பிரமணிய சாமி வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும், நின்று பேசி நலம் விசாரித்துவிட்டுச் சென்றார் கனிமொழி.
ஆனால் அழகிரியும் கனிமொழியும் ஒரே விமானத்தில்தான் டெல்லிக்குச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐயிடமிருந்து சம்மன் பெற்றுள்ள ஆ ராசா, நாளை வியாழக்கிழமை விசாரணைக்காக டெல்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment