Wednesday, December 22, 2010
குழந்தையை தூக்கி எறிந்துவிட்டு போனவர்தானே ஆகாஷ்?- நீதிபதிகள் கண்டிப்பு... வனிதா பிரச்னையில்நாளை தீர்ப்பு!
முதல் குழந்தையை முன்னாள் கணவர் ஆகாஷ் கடத்திச் சென்றதாக நடிகை வனிதா தொடர்ந்த வழக்கு விசாரணையில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த வழக்கில் ஆகாஷைக் கண்டித்த நீதிபதிகள், குழந்தை மீது இத்தனை நாள் இல்லாமல் இப்போது என்ன புதிய அக்கறை வந்தது என சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
நடிகை வனிதா (வயது 30), தனக்கும், ஆகாஷுக்கும் (முன்னாள் கணவர்) பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரியை (9) தன்னிடம் இருந்து ஆகாஷ் கடத்திச் சென்றதாகவும், சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் விசாரிக்கின்றனர். விஜய் ஸ்ரீஹரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி நீதிபதிகள் உத்தரவிட்டதையடுத்து, நீதிபதிகள் முன்பு கடந்த 13-ந் தேதி விஜய் ஸ்ரீஹரியை ஆகாஷ் ஆஜர்படுத்தினார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, விஜய் ஸ்ரீஹரியை எங்கே? என்று நீதிபதிகள் கேட்டனர். ஆகாஷ் தரப்பில் வக்கீல் இதயதுல்லா ஆஜரானார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:
இதயதுல்லா: இந்த வழக்கில் வேறு மூத்த வக்கீலை வைத்து வாதிட ஆகாஷ் விரும்புகிறார்.
நீதிபதிகள்: அந்த மூத்த வக்கீல் யார்? அவர் எங்கே? இது நியாயமற்ற செயல். ஏற்கனவே முழு அளவில் நீங்கள் வாதிட்டு முடித்துவிட்டீர்கள். வாதிடும் காலகட்டத்தில், மூத்த வக்கீல் வருவதாக கூறியிருந்தால் அது ஏற்கத்தக்கது. ஆனால் வாதிட்டு முடிந்தபிறகு இப்படி கூறுவதை எப்படி ஏற்க முடியும்?
இந்த விவகாரத்தில் அனைத்து விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டுவிட்டன. குழந்தையை ஆஜர்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே மேலும் வாதிடத் தேவையில்லை. உங்களிடம் வாதிட வேறு ஏதாவது பெரிய 'பாயிண்ட்' உள்ளதா?
இதயதுல்லா: இது ஆகாஷின் விருப்பம்.
நீதிபதிகள்: இந்த மனு மீது நாங்கள் உத்தரவிட இருக்கிறோம். என்ன உத்தரவு என்பதும் உங்களுக்கு தெரியும். கட்சிக்காரருக்காக கோர்ட்டு காத்திருக்காது. எனவே குழந்தையை மதிய உணவு இடைவேளைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்துங்கள்...", என்றனர் கண்டிப்புடன்.
பின்னர் மதியம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் முன்பு விஜய் ஸ்ரீஹரியை ஆகாஷ் ஆஜர்படுத்தினார். ஆகாஷ் தரப்பில் மூத்த வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி வாதிட்டார்.
"இந்த விஷயத்தில் குழந்தை நலன்தான் முக்கியம். குழந்தையின் விருப்பம் கேட்கப்பட வேண்டும். தந்தையுடன் தற்போது அவன் சந்தோஷமாக இருக்கிறான் என்பதால் அவனது நலனை கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆகாஷ் தொடர்ந்த வழக்கு 30-ந் தேதி சென்னை குடும்பநல கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. தாயின் வசம் குழந்தை ஒப்படைக்கப்பட்டால் அவனுக்கு பிரச்சினை ஏற்படாதா? என்ற கேள்வி எழுகிறது'' என்று அவர் வாதிட்டார்.
உடனே நீதிபதிகள், "விஜய் ஸ்ரீஹரியை செகந்திராபாத் கோர்ட்டில் தூக்கி எறிந்துவிட்டு, வனிதாவின் கவனிப்பில் அனுப்பிவிட்டுப் போனவர்தானே ஆகாஷ்? இப்போது ஏன் ஆகாஷ் அவனை தன்வசம் வைத்துக் கொள்ள விரும்புகிறார்? என்று கேள்வி எழுப்பினர்.
"அப்போது மிகவும் சிறு குழந்தையாக இருந்ததால் கவனிக்க முடியாது என்று நினைத்து அவனை தாயின் பராமரிப்புக்கு ஆகாஷ் அனுப்பிவிட்டார்" என்று ஆர்.கிருஷ்ணமூர்த்தி பதிலளித்தார். "அப்போது கவனிக்க முடியாதவருக்கு இப்போது மட்டும் என்ன அக்கறை? குழந்தையை இத்தனை நாள் பார்த்துக் கொண்டவர்களுக்கு இனியும் தொடர்ந்து பார்த்துக் கொள்ளத் தெரியாதா?" என்ற நீதிபதிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுத்து ஆகாஷின் வழக்கறிஞர் மவுனமாக இருந்தார்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு நாளை (வியாழக்கிழமை) பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment